

நிலச்சரிவில் பெற்றோரை இழந்த கேரள மாணவி கோபிகா A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
கரோனா பெருந்தொற்றுக்கு நடுவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்தன. இதற்கிடையே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு கேரளா, இரண்டு ஆண்டுகளாகப் பொதுத் தேர்வை நடத்தி முடித்தது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 29-ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இதை மாநிலக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இதில் 87.94 சதவீத மாணவர்கள் மொத்தமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். 136 பள்ளிகள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளன. அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 91.11 பேர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளப் பொதுத் தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவி கோபிகாவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கடந்த ஆண்டு நிலச்சரிவில் தாய், தந்தை உள்பட 24 உறவினர்களை இழந்தார் கேரள மாணவி கோபிகா. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் A+ மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இழப்பின் பெருவலியைப் பொறுத்துக்கொண்டு உழைத்திருக்கிறார். இந்த மனவலிமை போற்றுதலுக்குரியது'' என்று கமல் தெரிவித்துள்ளார்.