

புதுச்சேரி அரசு பல் மருத்துவக்கல்லூரியில் என்ஆர்ஐ காலியிடங்களை நிரப்ப சுகாதாரத் துறை திட்ட வரைவுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று அனுமதி தந்துள்ள முக்கிய கோப்புகள் விவரம்:
கரோனா அவசரகால உதவி மற்றும் மருத்துவ முன்னேற்பாடுகளின்கீழ், நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல், ஆய்வகங்கள் அமைத்தல், உயிரி-பாதுகாப்பு உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் முதலான நடவடிக்கைகளுக்காக புதுச்சேரி மாநில சுகாதாரச் சங்கத்திற்கு, 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதி உதவியாக ரூ.6.50 கோடி வழங்க ஒப்புதல் தந்துள்ளார்.
ஒருங்கிணைந்த மருத்துவச் சேவையைச் சிறப்பாகச் செயல்படுத்தும் விதமாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதாரம் மற்றும் நல மையங்கள் திறக்க, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலச்சேவைகள் இயக்குநரகம் இடையில் துறைரீதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக சுகாதாரத் துறையின் திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
நீட்-2021 மதிப்பெண்கள் அடிப்படையில் இரண்டு சுற்று நேர்காணலுக்குப் பிறகு மகாத்மா காந்தி முதுநிலை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலைப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் (NRI quota) மீதமுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான சுகாதாரத் துறையின் திட்ட வரைவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கான கட்டணம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை ஒத்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.