

அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மூத்த பேராசிரியருக்கே பொறுப்பு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகத் திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் எழிலன், அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநரின் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டதற்கு இணங்க, சிறுபான்மைக் கல்லூரிகள் உட்பட அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் முதல்வர் பொறுப்பில், பணியில் உள்ள மூத்த பேராசிரியரே பணிமூப்பின் அடிப்படையில் பொறுப்பு முதல்வராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கல்லூரியின் முதல்வர் விடுப்பிலோ அல்லது இதர பணியிலோ இருக்கும் பட்சத்தில், கல்லூரியின் மூத்த பேராசிரியரே முதல்வர் பொறுப்பில் செயல்பட உரிய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஒரு துறையில் பணி மூப்பின் அடிப்படையில் பணியில் உள்ள மூத்த பேராசிரியரையே துறைத் தலைவராக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது''.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.