Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூசன்ஸ், என்டிஆர்எஃப் இணைந்து வழங்கிய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல்: நம் சிந்தனை மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவர் அப்துல் கலாம்- விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஆ,சிவதாணுபிள்ளை புகழாரம்

நம் சிந்தனை எப்போதும் மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தைக் கொண்டவராக அப்துல் கலாம் விளங்கினார் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் ஆ,சிவதாணுபிள்ளை புகழாரம் சூட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’, எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூசன்ஸ், என்டிஆர்எஃப்இணைந்து ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமைநடைபெற்றது. இந்த நிகழ்வில், ‘பிரம்மோஸ் பிதாமகன்’ என்றழைக்கப்படும் பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தின்நிறுவனரும், விஞ்ஞானியுமான பத்மபூஷண் டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிமன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது:

விண்வெளி விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை: பொறியியல் கல்லூரில் நான் படித்தபோது எங்கள் வீட்டில் மின்விளக்கு வசதியில்லை. அதனாலேயே எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் படித்தேன். கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சிக்கு வந்த அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் என்னைப் பாராட்டினார்.

1969-ல் இஸ்ரோவில் சேர்ந்தேன். அங்குதான் முதன்முதலில் அப்துல் கலாமை சந்தித்தேன். என் செயல்களை கூர்ந்து கவனித்த கலாம், என்னை அவரதுகுழுவில் இணைத்துக் கொண்டார். ஸ்ரீஹரிகோட்டாவில் எஸ்எல்வி-3 செயற்கைக்கோள் செலுத்தும் பணியில் 2 மாதம்தூக்கமின்றி வேலை செய்தோம். முதல்கட்டத்தில் சீராக இருந்த செயற்கைக்கோள், 2-ம் கட்டத்தில் சிக்கலாகி வங்கக் கடலில் விழுந்தது. ‘வெற்றியை விடவும் தோல்வியிலிருந்துதான் படிப்பினை பெற முடியும். கற்றுக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தோல்வி உதவும்’ என்று அடிக்கடி சொல்வார் கலாம். அந்த அறிவுரை எங்களுக்கு பாடமானது.

இஸ்ரோவிலிருந்து அவர் டிஆர்டிஓ செல்லும்போது நானும் அவருடன் சென்றேன். அங்கேதான் அக்னி ஏவுகணை சோதனை செய்ய திட்டமிடப்பட்டு வெற்றியடைந்தது. எஸ்எல்வி-3 சோதனையில் இந்தியா 7-வது நாடு. அக்னி ஏவுகணை சோதனையில் இந்தியா 6-வது நாடு. எப்போது இந்தியா முதல் நாடாக வரும் எனும் கேள்வி கலாம் மனதில் தொடர்ந்து எழுந்துகொண்டேயிருந்தது. அதற்கான பதிலாக அமைந்ததுதான் 1998-ம் ஆண்டில் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை.

முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் இருவரிடம் நல்ல நட்புறவுடன் இருந்தவர் கலாம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கேபினட் அமைச்சராக கலாமை நியமிக்க விரும்பினார். பதவி மேல் ஆசையில்லாத கலாம் அதைமறுத்துவிட்டார். பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தை நிறுவியதில் எனக்கு பெரும்உந்துசக்தியாக விளங்கியவர் கலாம். இந்தியா அனைத்து துறைகளிலும் வளமான நாடாகத் திகழ வேண்டுமென்று விரும்பினார். தன்னைப் பற்றி எதுவும் எண்ணாமல் நாட்டைப் பற்றியே சிந்தித்தார். நம் சிந்தனை எப்போதும் மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தை கொண்டவராக அப்துல் கலாம் விளங்கினார்.

ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: நம் தேசத்தின் அறிவியல் தொழில்நுட்ப ஆளுமையாகத் திகழ்ந்தவர் அப்துல்கலாம். சென்னை வியாசர்பாடியில் ஓர்எளிய குடும்பத்தில் பிறந்த என்னையும் இந்த உயரத்துக்கு அழைத்து வந்ததுகலாம் விதைத்த அறிவியல் சிந்தனைகளே. ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்று இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பதற்கு வழிவகுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கலாம்.

ஏவுகணையோடு அணுசக்தியும் சேர்ந்தால் இந்தியா வல்லரசாக முடியும் என்றஎண்ணத்தில் பொக்ரான்-2 சோதனையை செயல்படுத்தி வெற்றி கண்டார். இந்திய நாடு பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றில் முதன்மையான நாடாக வேண்டும் என்பதில் மிகுந்தஅக்கறையுடன் செயல்பட்டவர் கலாம்.

ஏவுகணை தொழில்நுட்பத்தை, உயிரைக் காக்கும் தொழில்நுட்பமாக மாற்றிக்காட்டிய வல்லமையாளராக இருந்தார் கலாம். போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் எடை குறைந்தசெயற்கைக் கால்களைப் பொருத்தும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். ‘மூளையின் மூலமாக மனித வலியைக் குறைக்கமுடியும்’ என்று குறிப்பிட்டதோடு அதை,தனது கண்டுபிடிப்பின் மூலம் நிரூபித்தார்.

அவரது நினைவு நாளில் அவரின் பெருமைகளைப் போற்றி நாம் கொண்டாடுவதோடு, அவர் கனவு கண்ட இந்தியாவைஉருவாக்க இளைய தலைமுறையினர், அவரது நற்சிந்தனைகளை தங்கள்இதயத்தில் பதிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூசன்ஸ் அறங்காவலர் மற்றும் செயல்இயக்குநர் எஸ்.மோகன்தாஸ் வரவேற்புரையாற்றினார். ‘இந்து தமிழ் திசை’முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன்நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://bit.ly/3x9dSM1 என்ற லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x