Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM

கல்லூரி மாணவர்களுக்கு ஆக. 9 முதல் இணையவழி வகுப்புகள்: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. தற்போது நோய் பரவல் தணிந்துள்ள நிலையில் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக உயர்கல்வித் துறை ஆலோசனை செய்துவருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, துறைஅதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கல்லூரிகள் திறப்பு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

அதன்பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தைபோல மற்ற கல்லூரிகளிலும் தேர்வு மதிப்பீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

இதுதவிர பொறியியல் சேர்க்கைக்காக நேற்று முன்தினம் வரை (ஜூலை 27) 41,363 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வரும் நாட்களில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதேபோல் கலை, அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கு 1.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு படிக்க முடியும் என்ற நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் ஏற்படக்கூடும் என்பதால், இந்த முறையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காலக்கட்டம் என்பதால் தனியார் கல்லூரிகள் 75 சதவீதம் மட்டுமே கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல்ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொறியியல் வகுப்பு ஆக.18-ல் தொடக்கம்

பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18 முதல் நவ.30-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். டிச.2-ம் தேதி செய்முறைத் தேர்வும், டிச.13-ம் தேதி பருவத் தேர்வும் நடைபெறும். எம்சிஏ, எம்எஸ்சி, எம்பிஏ ஆகிய படிப்புகளுக்கும் ஆக.18-ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும். பொறியியலில் 3, 5 மற்றும் 7-வது பருவத்துக்கும், முதுகலையில் 3, 5-வது பருவத்துக்கும் இந்தக் கால அட்டவணை பொருந்தும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும். அதேபோல அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் 2022 ஜன.19-ம் தேதி தொடங்கும். அதேபோல, 4 வளாக கல்லூரிகளில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் செப்.15-ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x