Last Updated : 28 Jul, 2021 05:08 PM

 

Published : 28 Jul 2021 05:08 PM
Last Updated : 28 Jul 2021 05:08 PM

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

கோப்புப்படம்

புதுக்கோட்டை

கடந்த 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் எனக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. அதன்பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், கடந்த 3 மாதங்களாக அவர்கள் சம்பளம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்துக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் கூறும்போது, ''கரோனா காலகட்டமாக இருந்தாலும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதோடு, கல்வி சார் பணிகளான அக மதிப்பீட்டு மதிப்பெண் வழங்குதல், தேர்வு நடத்துவது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம்.

ஆனால், கடந்த ஏப்ரலில் இருந்து 3 மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும்.

ஆனால், அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கு விடுமுறையைக் காரணம் காட்டி வழங்கப்படாது. நிகழ் ஆண்டு கரோனா காலத்தில் மே மாதத்திலும் பணிபுரிந்துள்ளதால் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கும் மே மாதத்துக்கான சம்பளம் உட்பட அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநருக்குக் கோரிக்கை மனுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x