

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் ஓவியம் வரைவதில் 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' எனும் தேசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அரசர்குளம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிவர்மன் என்ற ரவிச்சந்திரன் மகன் ஹரிராஜ் (17). இவர், சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். தொடக்கப் பள்ளியில் இருந்து ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர், வீட்டின் வரவேற்பறையில், சுவரில் இயற்கைக் காட்சியை பெயின்ட் மூலம் வரைந்திருப்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஓவியம் வரைவதில் தேசிய அளவில் சாதித்துள்ள இவர், தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்பப் படைப்புகளை டிஜிட்டலாக்கி வருவதால் உழைப்பு வீண்போகாது என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.
இதுகுறித்து மாணவர் ஹரிராஜ் கூறியதாவது:
''தந்தை சுவர் விளம்பரம் எழுதுவதில் கைதேர்ந்த ஓவியர். அவரிடம் இருந்து 3-ம் வகுப்புப் படிக்கும்போதிருந்தே ஓவியம் வரையத் தொடங்கினேன். அரசர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தபோது அங்கிருந்த ஓவிய ஆசிரியர் ஜேம்ஸ்பாண்ட், எனக்கு வழிகாட்டினார். மேலும், அரசு மற்றும் தனியார் மூலம் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்தார். தொடக்கத்தில் 3-ம் இடமே பெற்று வந்த நான், முதலிடத்துக்கு முன்னேறியதற்கு அவரும் ஒரு காரணம்.
இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஏராளமான ஓவியப் போட்டிகளில் ஒன்றிய, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த நான், மாணவர்களிடையே கலை, பண்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காகக் கடந்த ஆண்டு அரசு சார்பில் நடத்தப்பட்ட கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தேன்.
மேலும், கிடைக்கும் நேரங்களில் வீட்டில் இருந்து ஓவியம் தீட்டி வருவதோடு, உள்ளூரில் சுவர் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். வாழை இலையில் இந்திய அரசின் லோகோவை வரைந்து, 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' எனும் தேசிய அளவிலான சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். அதிகபட்சம் 5 அடி சுற்றளவிலும், குறைந்தது 10 ரூபாய் நாணய வடிவிலும் ஓவியம் வரைந்துள்ளேன்.
மேலும், தந்தையைப் போன்று நவீனத் தொழில்நுட்பங்களால் நானும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால், எத்தகைய நவீனத் தொழில்நுட்பங்கள் வந்தாலும் பாதிப்பில்லாத வகையில் இருப்பதற்காக எனது ஓவியத்தை டிஜிட்டலாக்கி வருகிறேன். அதோடு, யூடியூப்பிலும் வீடியோவாக்கிப் பதிவேற்றி வருகிறேன். நுண்கலை ஓவியத்தைக் கற்று, சர்வதேச அளவில் சாதிக்க திட்டமிட்டுள்ளேன்''.
இவ்வாறு மாணவர் ஹரிராஜ் தெரிவித்தார்.