

புதிய தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆக உள்ள நிலையில், அதன் அமலாக்கம் மற்றும் அம்சங்கள் குறித்துப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நாளை உரையாற்ற உள்ளார்.
பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் மாற்றங்களைச் செய்து உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அறிமுகம் செய்தது. தேசியக் கல்விக் கொள்கைக்குப் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு அதை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
தாய்மொழி வழிக் கல்வி, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை, பொதுத் தேர்வுகள், மழலையர் கல்வி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் கூறப்பட்டிருந்தன.
இந்நிலையில் நாளை (ஜூலை 29) புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆக உள்ளது. இந்நிலையில், இதன் அமலாக்கம் மற்றும் அம்சங்கள் குறித்துப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''புதிய கல்விக் கொள்கை 2020, கற்றல் அம்சத்தையே மாற்றுவதற்கும், கல்வியை முழுமையாக்குவதற்கும் சுயசார்பு இந்தியாவுக்கான வலிமையான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் வழிகாட்டும் தத்துவம் ஆகும்.
புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நாளை (ஜூலை 29) மாலை 4.30 மணிக்கு உரையாற்ற உள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது