

அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உதவும் வகையில் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் சிறப்பு வசதி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை ஜூலை 26-ம் தேதி தொடங்கியது. ஆக.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளதுபோல், அரசு கலைக் கல்லூரிகளில் சேரவும் அதிக அளவு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் உள்ள சிரமங்களைக் களைந்து அவர்களுக்கு உதவும் நோக்கில் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் சிறப்பு வசதி மையம் நேற்று தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி இந்த வசதியைத் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்துக் கல்லூரி ஆசிரியர்கள் கூறும்போது, ''திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் 15 இளநிலைப் பாடப் பிரிவுகள், 16 முதுநிலைப் பாடப்பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன. அரசுக் கட்டணத்தில் தரமான கல்வி இங்கு வழங்கப்படுகிறது.
இதனிடையே, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடப்பாண்டும் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் அரசுக் கல்லூரியில் சேர அதிக அளவில் மாணவ- மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பது தெரியவந்ததால், திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி வளாகத்தில் மாணவ- மாணவிகளுக்கான வசதி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, இந்தக் கல்லூரி மட்டுமின்றி முசிறி, திருவெறும்பூர் அரசு கலை- அறிவியல் கல்லூரிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் எந்தக் கல்லூரியில் சேரவும் விண்ணப்பிக்கலாம்'' என்று தெரிவித்தனர்.