Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

தொலைக்காட்சி உட்பட மின்னணு சாதனங்கள் வழியாக அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதில் சுணக்கம்: வேலூர் மாவட்டத்தில் 8.9% என ஆய்வில் தகவல்

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை பார்த்து படிக்கிறார்களா? என்பதை வேலூர் கொசப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஈவெரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை தாரகேஸ்வரி மற்றும் ஆசிரியைகள். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வழியாக பாடங்களை படிப்பவர்களின் எண்ணிக்கை 8.9% என பின்தங்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளை திறப்பதில் தயக்கம் இருந்து வருகிறது. தனியார் பள்ளிகள் ‘ஆன்லைன்’ வழியாக பாடங்களை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கவலைக்குரிய தாக உள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி, ஆல் இந்தியா ரேடியா வழியாக பாடங்களை ஒளி, ஒலிபரப்பு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொலைக்காட்சி, மடிக்கணினி, டேப், செல்போன் என மின்னணு சாதனங்கள் வழியாக பாடங்களை படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 30% இருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொத்தம் 28 லட்சத்து 68 ஆயிரத்து 602 மாணவ, மாணவிகளில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 674 பேர் (29.9%) மின்னணு சாதனங்களை பயன்படுத்தி ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். பிற மாணவர்கள் தொடர்பில் இல்லாமல் இருப்பதால் அவர்களின் கல்வித்திறன் பாதிக்காமல் இருக்க தொலைக்காட்சி வழியாக பாடங்கள் படிப்பதை உறுதி செய்ய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்வதுடன் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பின்தங்கிய வேலூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 54,273 மாணவர்களில் 14,256 பேர் (26.3%), ராணிப்பேட்டை மாவட்டத்தில் 62,802 மாணவர்களில் 17,342 பேர் (27.6%), வேலூர் மாவட்டத்தில் 64,555 மாணவர்களில் வெறும் 5,742 (8.9%) பேர் மட்டும் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி பாடங்களை படித்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் ஆய்வு

தமிழக கல்வித்துறை ஆய்வின் அடிப்படையில் மாணவர்கள் பாடங் கள் படிப்பை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறும்போது, ‘‘பாடத்திட்ட கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள் தொலைக்காட்சி வழியாக பாடங்கள் படிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்து பட்டியல் அளித்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் கூறும்போது,‘‘ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் குழுக்கள் வழியாக பாட குறிப்புகளை அனுப்பி வருகின்றனர். கிராமங்களுக்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கியும் தொலைக்காட்சி வாயிலாக பிள்ளைகள் படிப்பதை பெற்றோர் கண்காணிக்க அறிவுரை வழங்கி, கல்வி தொலைக்காட்சியில் பாடங்களின் ஒளிபரப்பு நேரங்கள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்’’ என்றார்.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறும்போது, ‘‘ஒரு பாடத்தின் குறிப்பை 3 பக்கங்களுக்குள் சுருக்கி மாணவர்களுக்கு விநியோகிக்க உள்ளனர். ஒரு வாரம் கழித்து அந்த பாடத்துக்கான தேர்வு நடத்திய பிறகு அடுத்த பாடத்தை நடத்த உள்ளனர். வாட்ஸ்-அப் குழுக்கள், ஜூம் மற்றும் கூகுள் மீட் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பள்ளி திறந்தாலும் மாணவர்கள் எந்த சிரமும் இல்லாமல் அடுத்த பாடத்துக்கு செல்ல முடியும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x