

கரோனாவால் பள்ளி செல்லாத மாணவ, மாணவிகள் இலவசமாகக் கல்வி கற்க பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் உதவி செய்து வருகிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வியில் பின்தங்கியே உள்ளனர். கரோனாவால் வேலைவாய்ப்பை இழந்த கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் கல்விக்குத் தேவையான செல்போன், அதற்கான இணையதள வசதியை ஏற்படுத்த முடியாத சூழலில் உள்ளனர்.
இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இப்படியான நிலையில் மதுரை மாவட்டத்தில் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகக் கல்வி கிடைக்க வழி செய்திருக்கிறார் திண்டியூர் ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர்.
இவர் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட திண்டியூர், வீரபாஞ்சான், ஓடைபட்டி, ராணுவக் குடியிருப்பு உள்பட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்குச் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த, படித்து வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளிப் பெண்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய பெண்களை ஆசிரியர்களாகத் தேர்வு செய்து அவர்களைக் கொண்டு சிறுவர், சிறுமிகளுக்குப் பாடங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளார். இப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மாத ஊதியமும் வழங்குகிறார்.
அத்தோடு படிக்க வரும் மாணவ, மாணவிகள் சாப்பிட தினமும் சத்தான பயறு வகைகள் மற்றும் இலவசமாக நோட்டு, புத்தகம், பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களை வழங்கி வருகிறார். இதனால் இப்பகுதியில் கற்க வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர் கூறும்போது, ''கரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவ, மாணவிகள் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகளுக்குச் சாப்பிட உணவு வழங்குவது அவர்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. தற்போது எங்களின் முயற்சிக்குச் சில தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்துள்ளன'' என்று தெரிவித்தார்.