

அரசுப் பள்ளி நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, அம்பத்தூர் பள்ளியொன்றில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
''அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களைத் தக்க வைத்துக்கொள்ள, பள்ளியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதனால்தான் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக்குச் செல்லும்போது, அதுகுறித்துப் பரிசீலனை நடத்தி வருகிறேன். முதன்மைக் கல்வி அலுவலர்களிடமும் இதுகுறித்துக் கருத்துகளைக் கேட்டிருக்கிறோம். பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.
அரசுப் பள்ளி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிலங்கள் உரிய முறையில் மீட்கப்படும். பள்ளிக் கல்வித்துறையைப் பொறுத்தவரை துறை அதிகாரிகள், அரசுப் பள்ளிகள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் என எல்லோருமே முக்கியம். ஒரு தரப்புக்காக மற்றொரு தரப்பை விட்டுக்கொடுக்க முடியாது.
பள்ளிகளில் 75 சதவீதத்துக்கும் மேலாகக் கட்டணம் வசூலிப்பது தவறு. தனியார் பள்ளிகளில் முறைகேடாகக் கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது முதல்கட்டமாக எச்சரிக்கை செய்து வருகிறோம். தொடர்ந்து கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்.
பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தேர்வில் ஒரே முறையைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் இதுகுறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து இன்னும் ஆலோசனை தொடங்கவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் டிஆர்பி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்''.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.