Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- மரைன், ஓசன் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அதிக ஊதியத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

மரைன், ஓசன் இன்ஜினீயரிங் படிப்புகளைப் படித்தவர்களுக்கு அதிகஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன என்று ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 10 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த 25-ம் தேதி நடந்த 7-வது நிகழ்வில் மரைன், ஓசன் இன்ஜினீயரிங் படிப்புகள் எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் கூறியதாவது:

சென்னை புவி அறிவியல் அமைச்சக தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தின் பெருங்கடல் கண்காணிப்பு குழுத் தலைவர் டாக்டர் ஆர்.வெங்கடேசன்: இது போட்டிகள் நிறைந்த உலகம். இதில்,நாம் தேர்வு செய்து படிக்கிற படிப்புநமது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தருவதாக இருக்க வேண்டும். கடல்சார் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை ஐஐடி சென்னை, கரக்பூர், புவனேஷ்வர், ஐஐஎஸ்சி பெங்களூரூ ஆகிய இடங்களில் படிப்பது நல்ல வாய்ப்புகளை நமக்கு அளிக்கும்.

கல்லூரிகளில் கடல்சார் படிப்புகளைப் படிக்கும்போதே நமது விருப்பம் எந்தத் துறையில் உள்ளது என்பதற்கேற்ப நமது மேற்படிப்பையும் தொடரலாம்.

கல்வி உதவித் தொகை பெறலாம்

இந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதிகஊதியமும் பெறலாம். எஸ்ஏசி எனப்படும்ஸ்பேஸ் அப்ளிகேஷன், இஸ்ரோ போன்றவற்றில் நாம் பணி செய்யும் வாய்ப்புகளையும் பெறலாம். மேற்படிப்புகளைத் தொடரவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு மற்றும் தனியார்பெருநிறுவனங்கள் உதவித்தொகை வழங்குகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தூய்மையான பெருங்கடல் எனும்சிந்தனையில் கடல்சார் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேல்ஸ் பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் மரைன்டைம் ஸ்டடீஸ் இயக்குநர்கேப்டன் என்.குமார்: பிளஸ் 2 முடித்து மரைன், ஓசன் இன்ஜினீயரிங் படிப்பதைப் போலவே, 10-ம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ மரைன் இன்ஜினீயரிங்கும் படிக்கலாம். பிறகு தங்கள் விருப்பப்படி பி.இ மரைன் இன்ஜினீயரிங் படிக்கலாம். கடினமான வேலை, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கூடுதல் வேலையாக இருக்கும் என்பது உள்ளிட்ட எண்ணங்கள் பொதுவாக, இந்தத் துறை மீது இருக்கிறது. இது உண்மை என்றாலும் நல்லஊதியமும், அடுத்தடுத்த பதவி உயர்வுகளும் கிடைக்கும் துறையாக இது இருக்கிறது. கப்பல் பணியில் கூடுதல் பொறுப்பும், குறைந்த எண்ணிக்கையிலுள்ள குழுவினருடன் வேலைசெய்யும் திறனும், குடும்பத்தை விட்டு தனிமையில் இருக்கவும் பழக வேண்டும். இன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவீத பொருட்கள் கப்பல் வழியாகத்தான் நமக்கு கிடைக்கின்றன. உலகம் முழுக்க பயணம் செய்து, பல நாடுகளின் பண்பாடுமற்றும் கலாச்சாரங்களை அறிந்துகொள்ள முடியும்.

திறமை, பயிற்சி கற்றுத் தரப்படும்

மும்பை ஆங்லோ ஈஸ்ட்ரென்ஷிப் மேனேஜ்மென்ட் மாஸ்டர் மரைனர் கேப்டன் டி.ராமநாதன்: மரைன் இன்ஜினீயரிங் படிப்பில் அடிப்படையான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இந்தத் துறையில் வேலை செய்வதற்கான திறமையும், பயிற்சியும் உங்களுக்கு கற்றுத் தரப்படும். இதில் ரொம்பவும் முக்கியமானது பாதுகாப்புதான். கப்பலில் பணி செய்யும்போது நமக்கு தரப்பட்ட பணியை மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் செய்ய வேண்டும். நமக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள வேண்டும். கேப்டனை சந்தித்தும் நமது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் நமக்கான பணி இருக்கும். பிறகு ஓய்வெடுக்கலாம். பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு. ஜூனியர் பணியிலேயே நல்ல ஊதியம் பெறலாம். எந்த கல்லூரியில் படித்தாலும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே தேர்வாகும்படி கவனமெடுத்து படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், பொறியியல் படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3eXcLsn என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x