Published : 27 Jul 2021 03:13 am

Updated : 27 Jul 2021 06:39 am

 

Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 06:39 AM

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி- கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி நிச்சயம்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அறிவுரை

aala-pirandhom

சென்னை

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் யுபிஎஸ்சி தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று‘ஆளப் பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ என்ற இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த 25-ம் தேதி நடத்தியது. இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சியாளர் ஆகியோர் இணைய வழியில் கலந்துகொண்டு, சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்தும், அதற்கு தயாராகும் முறை பற்றியும் மாணவ, மாணவிகள் இடையே உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:


சேரன்மகாதேவி சார் ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ்: ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவு இளம் வயதில் பலருக்கு இருக்கும். அந்த ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், பெற்றோர் பெரிய அளவில் படித்தவர்கள் கிடையாது. சுய ஆர்வம் காரணமாக ஐஏஎஸ் தேர்வு குறித்து அறிந்துகொண்டேன். கடந்த 2015-ம் ஆண்டு ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உத்வேகம் பெற்றவர்களில் நானும் ஒருவன். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது தேர்வுக்கு தயாரானேன். முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. 2-வது முயற்சியில் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ் பணிக்கு தேர்வானேன். இத்தேர்வுக்காக இரண்டரை ஆண்டு காலம் தீவிரமாக படித்தேன்.

என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்கள்தான் ஐஏஎஸ் தேர்வுக்கு அடிப்படை. ஆனால், பாடப்புத்தகங்களில் இருந்து நேரடி கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. ஊகிக்க முடியாத வகையில் கேள்விகள் இருக்கும். புத்தகங்கள் மற்றும்இதர வழிகளில் நாம் கற்றுணர்ந்த விஷயங்களை யோசித்துபதில் எழுதுவதுபோல வினாக்கள்இருக்கும். தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கான போட்டி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஈடுபாட்டுடன் கூடியகடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு அவசியம். நல்லஆங்கில அறிவு வேண்டும் என்றஅவசியம் இல்லை. மெயின் தேர்வில் தமிழிலேயே விடை அளிக்கலாம். நேர்காணலையும் தமிழிலேயே எதிர்கொள்ளலாம். மெயின்தேர்வு, நேர்காணலை தமிழ்வழியில் எதிர்கொண்டு பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி ஆகியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி (ஊரகம்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.ஹரி பாலாஜி ஐபிஎஸ்: சிறுவயதில் இருந்தே காக்கி உடை மீது எனக்குஓர் ஈர்ப்பு உண்டு. ஐபிஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்று இளம் வயதிலேயே முடிவெடுத்தேன். பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றேன். பிளஸ் 2 முடித்ததும் ஏதேனும் ஒரு இளங்கலை படித்துவிட்டு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக திட்டமிட்டிருந்தேன். ஆனால், மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட எனக்கு, மருத்துவக் கல்லூரியில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு குணம் அடைந்தேன். நாளடைவில், மருத்துவப் படிப்பில் ஆர்வம் அதிகமானது. எம்பிபிஎஸ் முடித்ததும், மருத்துவ மேற்படிப்பு படிக்கும் ஆசை வந்தது. இதற்கிடையே, ஐஏஎஸ் தேர்வுக்கும் படிக்கத் தொடங்கினேன். முதல் முயற்சியில் மெயின் தேர்வில் தோல்விஅடைந்தேன். 2-வது முயற்சியில்நேர்காணல் வரை சென்றும், வெற்றிபெற முடியவில்லை. இதன்பிறகு, மருத்துவப் பணியை தொடர்ந்தேன். 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2012-ல் மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி, 3-வது முயற்சியில் வெற்றி பெற்றேன்.

உலகில் பிறந்த அனைவருக்குமே ஒரே மூளைதான். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றில் தனித் திறமையுடன் இருப்பார்கள். நம்மிடம் இல்லாத திறமைகளை பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள முடியும். கடின உழைப்பு, தொடர்முயற்சி ஆகியவைதான் ஐஏஎஸ்தேர்வில் வெற்றி பெற அடிப்படையான விஷயங்கள். தோல்வி வரும்போது, மனச்சோர்வு அடைவதால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும். முயற்சியை அதிகப்படுத்த வேண்டும். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து தவறுகளை சரிசெய்தால் வெற்றி உறுதி.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்சியாளர் சந்துரு: சங்கர் ஐஏஎஸ்அகாடமி, சென்னையில் மட்டுமல்லாமல், டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் என நாடு முழுவதும் கிளைகள் பரப்பி, விரிந்துபரந்து நிற்கிறது. இதுவரை எங்கள்மையத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். 1,200-க்கும் மேற்பட்டவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு மாநிலங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும்,3 ஆயிரம் பேர் வங்கி மற்றும் எஸ்எஸ்சி தேர்வுகளிலும் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் உள்ளனர். கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் 201 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் 13 பேர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர்கள் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

முன்பு 24 விதமான பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. தற்போது 19 விதமான பணிகளுக்காக நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 700 முதல் 800 காலியிடங்கள் வரை வருகின்றன. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதலாம். பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியிருக்க வேண்டும் என்பதுபோல எந்த கட்டுப்பாடும் கிடையாது. அஞ்சல் வழியில் படித்துபட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வயது வரம்புபொதுப் பிரிவினருக்கு 32. ஓபிசிபிரிவினருக்கு 35. எஸ்சி, எஸ்டிவகுப்பினருக்கு 37. சாதாரணகுடும்ப பின்னணி உடையவர்களும் அரசின் உச்சநிலை பதவி வரை செல்லக்கூடிய வாய்ப்பை வழங்கும் ஒரே தேர்வு சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள் https://bit.ly/3y8s8Wx என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.


‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சங்கர் ஐஏஎஸ் அகாடமிஆளப் பிறந்தோம்கடின உழைப்பு விடாமுயற்சியுபிஎஸ்சிஐஏஎஸ் ஐபிஎஸ்Aala pirandhom

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x