Last Updated : 26 Jul, 2021 02:49 PM

 

Published : 26 Jul 2021 02:49 PM
Last Updated : 26 Jul 2021 02:49 PM

ஜெயலலிதா பெயர் உறுத்தினால் அம்பேத்கர் பெயரை வைத்துவிடுங்கள்: பல்கலை. விவகாரத்தில் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்

ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் இருப்பது உறுத்தினால் அம்பேத்கரின் பெயரை வைத்துவிடுங்கள் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்ததைக் கண்டித்து இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசியதாவது:

’’கல்வியில் மிகவும் பின்தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாணவர்களின் நலன் கருதி கடந்த 25.02.2021-ல் ஆளுநரின் ஒப்புதல் பெற்று, அடுத்த நாள் அரசாணை வெளியிடப்பட்டு, அன்றே துணைவேந்தர் நியமிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகக் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்குள் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பணிகளைச் செய்ய இயலவில்லை. எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்பட்ட உடன் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு, பின் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறும். உதாரணமாகக் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டு, தற்காலிக இடத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இதுதான் நடைமுறை.

தற்போது ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்குச் செலவழிக்க நிதி இல்லை என்று சொல்லும் திமுக அரசு, மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க ரூ.200 கோடி எப்படி ஒதுக்கியது?. இவர்களுக்கு ஜெயலலிதா என்ற பெயர் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஜெயலலிதா என்ற பெயர்தான் உறுத்துகிறது என்றால், அனைவருக்கும் பொதுவானவரான அம்பேத்கரின் பெயரை வைத்துவிடுங்கள். எங்களுக்கு மாணவர்களின் உயர் கல்விதான் முக்கியம். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்தபோதே துரைமுருகன் எதிர்த்தார்.

விழுப்புரத்தில் தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகிறார்.

நிதி நெருக்கடி என்று பொன்முடி சொல்லும் காரணங்கள் ஏற்புடையவை அல்ல. அனைத்துத் தொகுதிகளுக்கும் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, ஏற்கெனவே செயல்பட்டு வரும் பல்கலைகழகத்தைச் செயல்படுத்த முடியவில்லையா. இதனைத் தொடர்ந்து நடத்துவதில் பொன்முடிக்கு என்ன நஷ்டம்?. வேறு யாராவது இதனைச் சொல்லி இருந்தாலாவது பரவாயில்லை. உயர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவர் பொன்முடி. விழுப்புரம் மாவட்ட மக்கள் குறிப்பாக விழுப்புரம் தொகுதி மக்களால்தான் இன்று பொன்முடி நன்றாக வாழ்கிறார். கடந்த 3 மாத ஆட்சியிலேயே இந்த நிலைமை.

அண்ணாமலை பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகம்தான். ஏற்றுக்கொள்கிறோம். அது 20 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது இந்தியாவிலேயே மோசமான பல்கலைகழகமாக உள்ளது. 806 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் சுமார் 4 ஆயிரம் பேராசிரியர்கள் வேலை செய்கின்றனர். 1,110 ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கு 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். மதுரை காமராஜர், பெரியார், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கும் நிதியைவிட அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு அரசு கூடுதலாக ரூ.300 கோடி ஒதுக்குகிறது. ஆனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடியை இந்த அரசால் ஒதுக்கமுடியவில்லை என்கிறார்கள்’’.

இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூணன், செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x