Published : 23 Jul 2021 01:08 PM
Last Updated : 23 Jul 2021 01:08 PM

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு: பள்ளிகளுக்கு அவகாசம் நீட்டிப்பு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களைப் பள்ளிகள் கணக்கீடு செய்து, பதிவேற்றுவதற்கான கால அவகாசம், ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தலா 30 சதவீதம், பிளஸ் 2 தேர்வுகளில் 40 சதவீதம் என்ற அளவில் இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதிப்பெண் கணக்கீடு குறித்து முழுமையாக அறிய: https://www.hindutamil.in/news/vetrikodi/news/683002-cbse-class-12-assessment-scheme-in-supreme-court.html

மதிப்பெண்களைப் பள்ளிகள் பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் (ஜூலை 22) நிறைவு பெற்ற நிலையில், ஏராளமான பள்ளிகள் இந்தப் பணிகளை முடிக்கவில்லை. இதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு மதிப்பெண்களைக் கணக்கிடுவதற்குப் பள்ளிகளுக்கு தரப்பட்ட அவகாசம் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

பள்ளிகள், ஆசிரியர்களின் நலன் கருதி வழங்கப்பட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 25-ம் தேதிக்குள் மதிப்பெண்களைக் கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியிடப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகும். மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மாணவர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x