Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

கரோனா பரவலால் மாணவர் இடைநிற்றல் அதிகரிப்பு; வேலைக்கு சென்ற குழந்தைகள் பள்ளிக்கு வருவது சந்தேகம்: அறிவியல் இயக்கத்தின் கள ஆய்வில் தகவல்

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் இடைநிற்றல் உயர்ந்துள்ளது. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலால் தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதன் ஆய்வறிக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பின்னர், அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, சுமார் 17 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத சூழல் என்றபோதும், இது பள்ளிக் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநிலம் முழுவதும் 35 மாவட்டங்களில் 2,137 மாணவர்கள், பெற்றோரிடம் பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் இடைநிற்றல் சற்று அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் பலரது குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும்கூட, சில குழந்தைகள் வேலையைவிட்டு உடனே பள்ளிக்கு வருவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.

அதேபோல, கிராமப்புற மாணவர்களை இணையவழிக் கல்வி முழுமையாக சென்றடையவில்லை. கல்வித் தொலைக்காட்சியை சுமார் 41 சதவீதம்பேர் மட்டுமே பார்க்கின்றனர். அதுவும்முழுமையான கற்பித்தலை தரவில்லை. தவிர, குழந்தைகளிடம் கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மெல்ல கற்கும் குழந்தைகளிடம், மீண்டும் பள்ளிக்கு செல்ல தயக்கம் நிலவுகிறது.

அதே நேரம், கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டைவிட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழக அரசின்கவனத்துக்கு சில பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்கள் அனைவரும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு திரும்பிவிட்டனரா என்பதை கண்காணிக்க வேண்டும். பள்ளிகள் திறந்ததும் நேரடியாக பாடங்களை நடத்தாமல் ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ கற்றுத் தந்து, அதன்பிறகு பாடங்களை சொல்லித் தரலாம். பாடத் திட்டத்தை குறைப்பதுடன், உள்ளூர் சூழலைப் பொருத்து பள்ளிகளை திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவர் என்.மணி, கல்வியாளர் என்.மாதவன், கள ஆய்வு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x