10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ வேண்டுகோள்

வானதி சீனிவாசன்: கோப்புப்படம்
வானதி சீனிவாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களும் தேர்ச்சி என அரசு அறிவிக்க வேண்டும் என, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ள அறிக்கை:

"கரோனா பெருந்தொற்று காரணமாக, 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவர்களின் பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு நடைமுறை தேர்வின் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், தனித் தேர்வர்களாகப் பதிவு செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் தேர்ச்சி அறிவிக்கப்படவில்லை. அதோடு, அவர்களுக்கான தேர்வையும் அக்டோபர் மாதத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

அக்டோபரில் தேர்வு, பின்னர் நவம்பரில் தேர்ச்சி முடிவுகள் வந்தால், எப்போது அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வார்கள் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். அதோடு, தனித் தேர்வர்கள் தேர்ச்சிக்கு முறையான மதிப்பீட்டு அணுகுமுறை என்ன என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழக அரசு 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சியை முன்கூட்டியே 'ஆல் பாஸ்' என அறிவித்து, அவர்களுக்கு முறையான மதிப்பெண் வழங்கினால், அந்த மாணவர்களும் கல்லூரியில் சேர வசதியாக இருக்கும். மாணவர்களின் எதிர்கால நலன்கருதி தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in