

10, 12ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவியதையடுத்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ரத்து செய்தது. அதில், மாணவர்களின் 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 31ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
தனித் தேர்வர்களுக்கு என எந்த ஒரு ஆவணமும் பராமரிக்கப்படாத நிலையில், அவர்களுக்கு விரைவில் தேர்வு நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. எனினும் தேர்வுத் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து, தேர்வு குறித்துக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 10 ,12ஆம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வு அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என சிபிஎஸ்இ தற்போது அறிவித்துள்ளது.
மாணவர்கள், தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள், தனித் தேர்வர்களாகக் கருதப்பட்டு, இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.