

மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு எழுத்தறிவு நிச்சயம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மணப்பாறை கல்வி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளிக்குடி, பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், தாயனூர் உட்பட 26 ஊராட்சிகளில் 100 சதவீதம் எழுத்தறிவித்தல் இயக்கத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
மணிகண்டம் ஒன்றியத்தில் எழுத்தறிவில்லாதவர்கள் என்று கண்டறியப்பட்ட பெண்கள் 3,676 பேர் உட்பட 4,599 பேருக்கு முதலில் கையெழுத்து இடுவதற்கும், பின்னர் அவர்கள் படிக்கவும் 69 நாட்களுக்குள் பழக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து கற்பித்தல் பணிகளை நடத்தவுள்ளனர்.
கள்ளிக்குடியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.பழனியாண்டி ஆகியோர் முன்னிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எழுத்தறிவித்தல் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு தமிழ் மொழியின் முதல் எழுத்தான "அ" என்ற எழுத்தைக் கரும்பலகையில் எழுதி, வாசித்துக் காட்டினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''கிராமப்புறங்களில் கல்வியறிவு பெறாதவர்களுக்குக் கல்வியறிவு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எழுத்தறிவு இல்லாததால் முதியவர்கள் பலரும் பல்வேறு சூழல்களில் ஏமாந்துவிடுகின்றனர்.
எனவே, இனி விரல் ரேகை வைக்காமல் முதலில் குறைந்தபட்சம் கையெழுத்து இடுவதற்கும், பின்னர் படிப்பதற்கும் இந்தத் திட்டத்தில் பயிற்றுவிக்கப்படும். மாநிலம் முழுவதும் குறைந்தபட்சம் 1 கோடி பேருக்கு எழுத்தறிவு நிச்சயம் ஏற்படுத்தப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.