

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல் முறையாகக் கல்லூரிக்கே சென்று மாணவிகளுக்குத் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியுள்ளது.
புதுவையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு இன்று (19-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாகக் கல்லூரிக்கே சென்று மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்துக் கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் கூறுகையில், "சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரியின் சுகாதார சங்கம் ஆகியவை இணைந்து இம்முகாமை ஒருங்கிணைத்துள்ளன. இந்த முகாமில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டு முதலாம் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வார்கள்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த முகாம் மூலம் சுமார் நாலாயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் பயன்பெற உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோர் தவறாமல், தங்களின் ஆதார் அட்டையை உடன் எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.