Last Updated : 19 Jul, 2021 04:48 PM

 

Published : 19 Jul 2021 04:48 PM
Last Updated : 19 Jul 2021 04:48 PM

புதிய கல்விக் கொள்கை 2020; நல்ல மாற்றம்தான் வரவேற்கலாம்... வாங்க..!

பிரதிநிதித்துவப் படம்

நீண்டநாள் நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன் திடீரென தொலைபேசியில் பேசினார். பதின்பருவ பள்ளிக் குழந்தைகள் இருவரின் தந்தை அவர். கரோனா காலத்தில் தனது மகன்களின் பள்ளிப்படிப்பு வீணாகி வருவது குறித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேச ஆரம்பித்தார். "புதிய கல்விக் கொள்கையைச் சிலர் ஆதரித்துப் பேசுகிறார்கள்; சிலர் எதிர்த்துப் பேசுகிறார்கள். உண்மையில் புதிய கல்விக் கொள்கை நல்லதா, கெட்டதா என்று ஒரே குழப்பத்தில் இருக்கிறேன்" என்றார்.

அப்போதுதான் புதிய கல்விக் கொள்கை பற்றி சாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எழுத வேண்டும் என்று தோன்றியது. இதுவரை இருந்துவரும் கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. எந்த சமூகமும் முன்னேறுவதற்கு மாற்றங்கள் அவசியம் என்ற அடிப்படையில், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது.

1986-ம் ஆண்டு அன்றைக்கு இருந்த சமூக சூழ்நிலைகளின் அடிப்படையில், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கச் செய்தல், சாதி, இனப் பாகுபாடின்றி சம வாய்ப்பு வழங்குதல், கல்வி மீதான நம்பிக்கையை உருவாக்குதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு அன்றைய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, 1992-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, கல்விக் கொள்கையில் சிறிய மாற்றங்களைச் செய்தார்.

அதன்பிறகு 2020-ம் ஆண்டில்தான் அடுத்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலைகள் இன்றைக்குப் பொருந்தாது. இன்றைய கல்விச் சூழலே வேறு. இன்று பள்ளிக்கு செல்வதோ, உயர்கல்வி பெறுவதோ பெரிய பிரச்சினையாக இல்லை.

உலகில் ஏற்பட்டுள்ள போட்டி சூழ்நிலையைச் சமாளிக்கும் வகையில், தரமான கல்வி வேண்டும் என்பதே இன்றைய தேவையாக இருக்கிறது. நம் மாணவர்கள் உலக அளவில் போட்டி போடுகிறார்கள். சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள கல்வி முறையுடன் இந்தியக் கல்வி முறையை ஒப்பிட்டுப் பேசுகின்றனர்.

இன்றைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கல்வி முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது ஒரு அரசின் கடமை. அந்தக் கடமையைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய மாற்றம் இது.

புதிய கல்விக் கொள்கையில் தற்போதுள்ள 10 + 2 முறை மாற்றப்பட்டு 5 + 3 + 3 + 4 என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகள் அடிப்படைக் கல்வியாக உள்ளதால், தாய்மொழிக் கல்வி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் இன்றைய காலகட்டத் தேவைக்கு ஏற்ப தொழிற்கல்வி, நேரடிப் பயிற்சி மூலம் அனுபவக் கல்வி, போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப தயார்படுத்தும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்பிறகு உள்ள நான்காண்டு பட்டப்படிப்பில் எந்தக் கட்டத்திலும் சேருவதற்கும் விலகுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் மாணவர்களைக் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் என்ற பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் எந்தப் படிப்பையும் கூடுதலாகப் பயில வாய்ப்பளிக்கப்படுகிறது. 'அகாடமிக் கிரெடிட்' என்ற அடிப்படையில், மதிப்பெண் வழங்கப்பட்டு 'சிபில்' ஸ்கோர் போன்று 'அகடமிக் கிரெடிட் வங்கி' மூலம் மதிப்பெண் வழங்கப்படும். இதன் அடிப்படையில், மாணவர்கள் எந்தப் படிப்பையும் தேர்வு செய்யலாம். இது கல்வியில் வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை.

இதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச கல்விச் சூழலுக்கு ஏற்ப இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. ஓராண்டு முதுநிலை படிப்பு அறிமுகமாகிறது. இதுவும் சர்வதேச கல்விச் சூழலுக்கு ஏற்ப நம் மாணவர்களை தயார்படுத்தக் கூடியதாகும். எம்.ஃபில். படிப்பு ரத்து செய்யப்படுகிறது. இதுவும் நல்ல முடிவாகவே கருதப்படுகிறது.

இதுதவிர, புதிய கல்விக் கொள்கையின்படி, நாட்டின் மொத்த பட்ஜெட்டில் 6 சதவீதம் செலவழிக்கப்பட உள்ளது. தற்போது இந்த அளவு 3 சதவீதம் மட்டுமே. இதைவிட முக்கிய திருப்பமாக 100 சர்வதேச கல்வி நிறுவனங்கள் இங்கு கல்வி மையங்களை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் இந்திய கல்விச்சூழலின் தரத்தை உலக அளவுக்கு இட்டுச் செல்லும்.

இதைக் கண்டு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பயப்படத் தேவையில்லை. பன்னாட்டு சூப்பர் மார்க்கெட்டுகள் இங்கு அறிமுகமானபோது, தங்கள் தொழில் அழிந்துவிட்டது என்று பயந்த சிறு நாடார் பலசரக்கு கடைக்காரர்கள் இன்று தாங்களே சூப்பர் மார்க்கெட்டுகளைத் திறந்து பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளனர். இதேபோன்ற சூழ்நிலைதான் கல்வி நிறுவனங்களுக்கும் ஏற்படும். இதுதான் உண்மையான வளர்ச்சிக்கான வழி.

நாட்டில் பள்ளிக் கல்வியை முடிக்காமல் 2 கோடி மாணவர்கள் வெளியேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீண்டும் கல்வி கற்க வரவழைக்க புதிய கல்விக் கொள்கையில் இடமுண்டு.

பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடக்கவிருப்பதால் மாணவர்களுக்கான தேர்வு நெருக்கடி, மன உளைச்சல் இருக்காது. ஆசிரியர்களின் தரம் நமது கல்வி முறையில் மிகவும் கேள்விக்குரியதாகும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில், நான்காண்டு பி.எட். படிப்பு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி போன்ற சிறப்பம்சங்கள் தற்போதுள்ள குறைகளைக் களையும்.

ஜெர்மனி, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கல்வி முறையில் வெற்றிபெற்ற அம்சங்களைப் பொறுக்கி எடுத்து அதைப் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்துள்ளனர். தேசிய கல்வி வாரியம், மாநிலக் கல்வி வாரியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பாடத்திட்டங்களில் நடைமுறைக்கு ஏற்ப அவ்வப்போது சீர்திருத்தம் மேற்கொள்வது காலத்தின் தேவைக்கேற்ப செய்யப்பட்டுள்ள மாற்றம். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரு சீரான கல்வி முறைக்கு வித்திடும் இந்த மாற்றம் சர்வதேச அளவில் நம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கும் நியாயமான காரணங்களாக இரண்டு உள்ளன. ஒன்று 5-ம் வகுப்பு வரையிலான தாய்மொழிக் கல்வி முறை வெவ்வேறு மொழிகள் பேசும் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும், திடீரென 6-ம் வகுப்பில் ஆங்கிலத்துக்கு மாறும்போது மாணவர்கள் திணறும் நிலை ஏற்படும் என்பது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று நம்பலாம்.

இரண்டாவது, கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருக்கும்போது, மாநில அரசுகளை ஆலோசிக்காமல் முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கல்வியைக் கொண்டு செல்வது ஏற்புடையதல்ல என்பதாகும். அரசியல்ரீதியாக இந்த எதிர்ப்பு நியாயமானதாக தோன்றினாலும், புதிதாக உருவாகும் மாநில கல்வி வாரியம் வாயிலாக மாநில அரசுகள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சீரான, தரமான கல்வி இருப்பது நல்லதுதான். எனவே, மாணவர்களின் நலன் கருதி மாநில அரசுகள் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

நடப்புக் கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் இருந்து தொடங்கும் புதிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு 2025 -2026ஆம் கல்வி ஆண்டில் இருந்து முழுமையாக அமலுக்கு வரும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் பெருமளவில் நன்மை விளைவதற்கான அறிகுறிகளே இருப்பதால் மாற்றத்தை வரவேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x