Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் ஃபுட் சயின்ஸ், வேளாண்மை துறைகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல் :

அதிக வேலைவாய்ப்பும், தேவையும் உள்ள படிப்புகளாக ஃபுட்சயின்ஸ், அக்ரிகல்ச்சர் விளங்குகின்றன என்று ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 13 நாட்கள் நடக்க உள்ளது. கடந்த 17-ம் தேதி நடந்த 4-வது நிகழ்வில் ஃபுட் சயின்ஸ், அக்ரிகல்ச்சர் படிப்புகள் எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக டீன் (அக்ரிகல்ச்சர்) டாக்டர் எம்.கல்யாணசுந்தரம்: நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது 48 மில்லியன் டன் உணவு நம்மிடம் இருந்தது. அப்போது மக்கள்தொகை 30 கோடி. இப்போது நீர்வளம், நிலவளம், இயற்கை வளம் குறைந்து, வேளாண்மை செய்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்திருப்பது போன்ற பல சவால்களுடன், இன்னொருபுறம் மக்கள்தொகையும் கூடிக்கொண்டே செல்கிறது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும் 120 கோடி மக்களுக்கும் சுமார் 283 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டு, எந்த ஒரு தனி மனிதருக்கும் உணவு பற்றாக்குறை இல்லை என்ற நிலை உள்ளது. வேளாண்மை என்பது கல்வியாக, அறிவியலாக, ஆய்வாக மாறியிருப்பதால்தான் நம்மால் இந்த சவால்களை முறியடிக்க முடிந்துள்ளது.

ஆண்டுக்கு 1 லட்சம் வேளாண் பட்டதாரிகள் தேவை உள்ளது. ஆனால், சுமார் 40 ஆயிரம் பேர்தான் வருகின்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் 72 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 8-வது இடத்தில் உள்ளது. இதில் உறுப்புக் கல்லூரிகளாக 14 அரசு வேளாண் கல்லூரிகள் உள்ளன. அதில், வேளாண்மை 7 கல்லூரிகளிலும், வேளாண்மைபொறியியல் 2 கல்லூரிகளிலும், தோட்டக்கலை 3 கல்லூரிகளிலும், வனவியல் ஒரு கல்லூரியிலும், சமுதாய அறிவியல் ஒரு கல்லூரியிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இத்துடன் 29 தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு அடுத்தமாதம் 2-வது வாரத்தில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.வேளாண் கல்வி, இன்றைக்கு அதிக வேலைவாய்ப்பும், தேவையும் உள்ள படிப்பாக விளங்குகிறது.

கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவி பேராசிரியர் டாக்டர் பி.ஆர்.ஜான்சி ராணி: உணவு சார்ந்த துறையை பொருத்தவரை, இந்த ஆண்டு அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பிஎஸ்சி இளநிலை படிப்பாக ஃபுட் சயின்ஸ் அண்ட் நியூட்ரிஷன்ஸை கொண்டு வந்துள்ளது. இது 3 ஆண்டுகால படிப்பாகஇருந்தாலும், இதற்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகளாக அமைத்து வந்தோம். பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான இப்படிப்பில் ஃபிஸிக்கல் சயின்ஸ், பயோலாஜிக்கல் சயின்ஸ் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிக உணவு உற்பத்தி செய்யும்அதே நேரம், சில இடங்களில் அதிக உணவு வீணடிக்கப்படுகிறது. இதை மாற்றி, உணவுகளை சேதாரமின்றி அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும். இதற்கு வேளாண் துறையின் ஏராளமான பட்டதாரிகள் இன்றைய தேவையாக இருக்கிறது.

‘கல்வித் துறையில் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும்’ என்பதில் அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. சிறந்த கட்டமைப்புகள், தரமான ஆய்வுக் கூடங்களுடன் செயல்படும் அம்ரிதா கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர், இந்த சமுதாயத்துக்கு தான் கற்றகல்வியை பயனுள்ள வகையில் வழங்கும் சிறந்த மனிதனாக விளங்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயலாற்றி வருகிறோம்.

கோவை அரியலூர் ஆர்ஏ குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் ப்ரியாகுணசேகர்: எல்லோருமே அவரவர்க்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு வந்தோம். தற்போது கரோனா பரவலுக்குப் பிறகு, நாம் சாப்பிடும் உணவு சத்தானதா, அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்கிற கேள்விகள் எழுகின்றன. இந்த சூழலில்உணவு நிபுணர் என்ற வகையில், அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு எது என்பதை தேர்வுசெய்ய வேண்டிய பொறுப்பு வருகிறது. உணவு உருவாக்கத்தைப் பொருத்தவரை, புதிய உணவை தயாரித்தல், அதை பேக்கிங் செய்தல், அதில் உள்ள சத்துகள் குறித்துஆய்வு செய்தல் போன்ற பலநிலைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்குவதற்கான முதல் பணியை ஃபுட் சயின்ஸ், அக்ரிகல்ச்சர் படித்தவர்களே செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். எந்த படிப்பு படித்தாலும் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அப்படியான எண்ணங்களைக் கொண்டோருக்கான சிறப்பான எதிர்காலம் உணவுத் தொழிலில் இருக்கிறது. இத்துறையில் சுயதொழில் செய்வோர் நிறைய பேர் உருவாகி உள்ளனர். சிறு, குறு தொழில் செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு ரூ.5 லட்சம்வரை மத்திய அரசு கடனுதவிவழங்குகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 35 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், பொறியியல் படிப்புமற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இணையத்தில் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3zdwvjp என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x