Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று கல்லூரியின் ஆண்டுமலரை வெளியிட, முதல் பிரதியை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, “ஆண்களும் பெண்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. நீதிக் கட்சியை தொடங்குவதற்கான கூட்டம் எத்திராஜின் இல்லத்தில்தான் நடந்தது. கல்லூரிகளில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களோடு சேர்ந்து சமூகநீதி, பெண்களின் உரிமை போன்றவற்றையும் மாணவ, மாணவிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, “ இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என்றார்.

தயாநிதி மாறன் பேசும்போது, “பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதிதான். திமுக இல்லையென்றால் பெண்களுக்கு பல உரிமைகள் கிடைத்திருக்காது” என்றார்.

விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ ஐ.பரந்தாமன் ஆகியோர் வழங்கினர். முன்னதாக, எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை நிர்வாகக்குழு தலைவர் சந்திராதேவி தணிகாசலம் வரவேற்றார். நிறைவாக, கல்லூரின் செயலர் மற்றும் முதல்வர் செ.கோதை நன்றி கூறினார்.

விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x