Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’; எம்பெட்டட் சிஸ்டம்ஸ், ஐஓடி படிப்புகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரிப்பு- ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எம்பெட்டட் சிஸ்டம்ஸ், ஐஓடி படிப்புகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வவித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது. ஜூலை 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 14 நாட்கள் நடக்கவுள்ளது. கடந்த வெள்ளியன்று நடந்த 3-வது நிகழ்ச்சியில் ‘எம்பெட்டட் சிஸ்டம்ஸ், ஐஓடி படிப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

பெங்களூரு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் அனலாக் டிசைன் இன்ஜினீயர் பா.லக்ஷ்மணன்: அனைத்து பொருட்களின் சங்கமம் எனப்படும் ஐஓடி படிப்பு, அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் மிக முக்கியமானதாகும். மனித குலம் தோன்றிய காலந்தொட்டே மனிதர்கள் தங்களதுஉணவு, உடை, இருப்பிடத் தேவைக்காக கருவிகளைப் பயன்படுத்தத்தொடங்கினர். கடந்த 100 ஆண்டுகளில் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், ஆடம்பரம் மற்றும் பொழுதுபோக்குக்காகவும் மனிதர்கள் மிகுதியாக கருவிகளைக் கண்டுபிடித்தனர். மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மைக்ரோடெக்னாலஜி என பல துறைகளிலும் ஏராளமான கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும், கணினி தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு, தானியங்கி கருவிகளின்தாக்கம் வேகமாகப் பரவி வருகிறது.

நாம் ஓரிடத்தில் இருந்தபடியே வீட்டை, அலுவலகத்தை மானிட்டர் செய்ய முடியும். கோவிட் தொற்றுபரவலின்போது வீட்டிலிருந்தபடியே ஒரு நோயாளியை கவனித்து, அவருக்குத் தேவையான சிகிச்சையளிக்கக் கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறையில்காற்றின் ஈரப்பதத்தை கண்டறிவதற்கும், வனத்துறையில் காடுகளையும், விலங்குகளையும் கண்காணிக்க ஆட்டோமேடிக் இயந்திரங்கள் உதவுகின்றன. மருத்துவத் துறையிலும்கண், காது உள்ளிட்ட உறுப்புகளுக்குச் சிகிச்சையளிப்பதில் நுண்கருவிகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எம்பெட்டட் சிஸ்டம்ஸ், ஐஓடிபடிப்புகளுக்கான தேவை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பெங்களூரு அனலாக் டிவைசஸ் இண்டியா (சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ்) சீனியர் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் பிரசாத்: எம்பெட்டட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐஓடி-யில் பொறியியல் படிப்பு படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. அதிவேகமாக வளரும் இந்தப் படிப்புக்கு அபரிமிதமான வேலைவாய்ப்புள்ளது. ஹார்டுவேர், சாஃப்ட்வேருடன் குறிப்பிட்ட செயல்பாட்டுக்கென வடிவமைக்கப்பட்டதுதான் எம்பெட்டட் சிஸ்டம். மற்ற சிஸ்டங்களுடனும் இதை இணைத்துக்கொள்ளலாம். அனைத்துவகை பொறியியல் பட்டதாரிகளும் இதில் இணைந்து பணி புரியலாம். விவசாயம் முதல் விமானப் போக்குவரத்து வரை பல களங்களில் இந்த எம்பெட்டட் சிஸ்டம் / ஐஓடி-யின் பயன்பாடு இன்றியமையாதது. இதில் பல்வேறு உட்பிரிவுகளும் உள்ளன. தற்போதைய சிஸ்டம் / ஐஓடி-யானது அதிகமாகக் கற்றல் மற்றும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்-ஐ சார்ந்துள்ளது. வருங்காலத்தில் எல்லா உற்பத்திப் பொருட்களும் அனைத்து ஃப்ளாட்ஃபாரம்களுடனும் சுலபமாக இணைய முடியும். சாட்டிலைட் தொலைதொடர்பு, தொழில்துறை, அனைத்துவகை ஸ்மார்ட் வகை செயல்பாடுகளின் குழப்பமான பிரச்சினைகளை தீர்க்க இது உதவும். எம்பெட்டட் சாஃப்ட்வேர், சிப் டிசைன் களங்கள் அதிக வேலைவாய்ப்பு தரக்கூடியவை.

சென்னை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஏ.மணிகண்டன்: ஒருவர் பேருந்து எப்போது வரும் என்பதை அறிந்துகொள்ளவோ, அருகில் எந்த ரெஸ்டாரன்ட் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவோ ஜிபிஎஸ் முறை பயன்படுகிறது. ஏற்கெனவே திரட்டப்பட்ட தகவல்களை தொகுத்து, கூகுள்மேப்பில் அப்லோடு செய்து விடுவார்கள். அவற்றை நமக்கு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. எம்பெட்டட் என்பது ஒருவிஷயத்தில் இன்னொரு விஷயத்தை
சேர்ப்பதாகும். இதில் உங்கள் டாஸ்க்கிற்கு என தேவையோ அதற்கேற்ற மாதிரி புரோகிராம் அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஹார்டுவேரை சாஃப்ட்வேர் வைத்து கன்ட்ரோல் செய்தால் அது எம்பெட்டட் ஆகும்.

நீங்கள் எங்கே செல்ல வேண்டுமென்கிற தகவலை ஜிபிஎஸ் சிஸ்டத்தில் பதிந்து விட்டால், கார் தானாகவே அந்த இடத்துக்கு சென்று சேர்க்கும். சாலையில் காரில் செல்லும்போது தொடர்ந்து ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டிராமல், ஒரு குறிப்பிட்ட வேகத்தை ஃபிக்ஸ் செய்துவிட்டால், கார் சீரான வேகத்தில் தொடர்ந்து செல்லும். விபத்து ஏற்படும்போது காரிலுள்ள ஏர்பேக் ஓபனாகி நம்மை காக்கிறது என்றால்அதிலுள்ள சேஃப்ட்டி கன்ட்ரோல்சிஸ்டமே காரணம். வெளியிலிருந்தபடியே நம் வீடுகளிலுள்ள விளக்கு, ஏசி, கேஸ் ஸ்டவ் ஆகியவைகளை கன்ட்ரோல் செய்வதற்கும் இந்த சிஸ்டம் பயனளிக்கிறது. இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, பொறியியல் படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந் நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/36JmU7u என்ற லிங்க்
கில் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வில், எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் – எனர்ஜி சயின்ஸ் படிப்புகள் குறித்து கல்வியாளர்கள் கருத்துரையாற்றுகின்றனர். மேலும், சென்னை அண்ணா பல்கலை. முன்னாள் டீன், சிஇஜி டாக்டர் எஸ்.இனியன், கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலமுருகன் ஆகியோரும் ஆலோசனை வழங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x