

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வண்ண ஓவியங்களால் தனது வீட்டைக் கல்லூரி மாணவி ஒருவர் அலங்கரித்து வருகிறார்.
கறம்பக்குடி, தென்னகரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் நந்தினி. கல்லூரி மாணவியான இவர், கரோனா ஊரடங்கினால் கல்லூரி செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
பொழுதை வீணடிக்காமல் தண்ணீர் ஊற்றிக் கலக்கப்பட்ட பெயின்ட் மூலம் வண்ண ஓவியங்களைத் தீட்டி, வீட்டுச் சுவரை அலங்கரித்து வருகிறார். இதை, அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் நந்தினி கூறும்போது, ’’பள்ளியில் படிக்கும்போதிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். தொடக்கத்தில், நோட்டுகளில் பென்சில் மூலம் பல்வேறு ஓவியங்களை வரைந்து வந்தேன். தற்போது கரோனா ஊரடங்கினால் வீட்டிலேயே இருந்து வருவதால் சார்ட் பேப்பரில், தண்ணீர் கலக்கப்பட்ட பெயின்ட் மூலம் தினசரி ஓவியம் வரைந்து வருகிறேன்.
கடந்த 40 நாட்களில் வரையப்பட்ட சுமார் 200 ஓவியங்களைப் பத்திரப்படுத்தியுள்ளேன். இயற்கைக் காட்சிகள், பூக்கள், வீடுகள் உள்ளிட்டவற்றைத் தத்ரூபமாக வரைந்திருப்பதை, இப்பகுதியினர் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
உள்ளார்ந்த எண்ணங்களை ஓவியமாக்கி, அதைச் சுவரில் ஒட்டி வீட்டை அலங்கரித்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது. கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டதும் இதே ஊரில் கண்காட்சி நடத்தத் திட்டமிட்டுள்ளேன். மூத்த ஓவியர்களின் ஆலோசனையுடன் ஓவியங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கும் திட்டமிட்டுள்ளேன்’’ என்று மாணவி நந்தினி தெரிவித்தார்.