Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான புதிய எம்.டெக் படிப்புகள்: டிஆர்டிஓ - அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிமுகம்

சென்னை

பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான புதிய எம்.டெக் படிப்புகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்துடன் இணைந்து பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இந்த எம்.டெக் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. போர் வாகன தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், போர்க்கப்பல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் உணரிகள்(Sensors), அதிசக்தி பொருட்கள் தொழில்நுட்பம், லேசர் மற்றும் மைக்ரோவேவ் சார்ந்த இயக்கப் பெற்ற சக்தி தொழில்நுட்பங்கள் ஆகிய 6 பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன.

நேரடி, ஆன்லைன் படிப்பு

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட அரசு பொறியியல் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அனுமதியுடன் வழங்கப்படும் இந்த படிப்புகளை நேரடியாகவோ அல்லது இணையவழியிலோ படிக்கலாம்.

இந்திய பாதுகாப்பு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் நிறுவனம்(Institute of Defence Scientists and Technolo -gists) இந்தப் படிப்புகளை நடத்தும் கல்விநிறுவனங்களுக்கு தேவையான உதவிகளைசெய்யும். ஓய்வுபெற்ற டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த பொறியாளர்கள் இந்தநிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாணவர்களுக்கு சிறப்பு வசதி

பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் அனுபவமிக்க இவர்கள், பாடங்களை போதிக்க தேவையான வழிகாட்டுதல்களை கல்வி நிறுவனங்களுக்கு வழங்குவர். இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இன்னொரு சிறப்பு வசதியாக மாணவர்கள், தங்களுடைய பட்டமேற்படிப்பு ஆராய்ச்சியை மேற்கொள்ள டிஆர்டிஓ ஆய்வகங்களிலும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

இதுகுறித்து டிஆர்டிஓ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறும்போது, “மகாராஷ்டிராமாநிலத்தின் புனேவில் அமைந்துள்ள பாதுகாப்பு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த பட்ட மேற்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி பாதுகாப்பு துறை சார்ந்த நேரடி பொறியியல் தொழில்நுட்ப படிப்புகள் இந்தியாவில் இல்லை.

இந்த புதிய திட்டத்தின்படி பாதுகாப்புதொழில்நுட்பங்களைப் படிக்க மாணவ, மாணவிகளுக்கு பரவலாக வாய்ப்புகள் ஏற்படும். பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சிநிறுவனங்களிலும் உற்பத்தி தொழிற்சாலைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகளை பெற இளம் தலைமுறையினரை இந்த படிப்புகள் தயார்படுத்தும். பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்ற மனித வளத்தை இந்தியாவில் உருவாக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x