Published : 17 Jul 2021 03:16 AM
Last Updated : 17 Jul 2021 03:16 AM

வீரகேரளம்புதூர் ஆசிரியை முயற்சியில் ஆடியோ வடிவில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள்

தென்காசி

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி, சாரல் ஐடிசி ஏற்படுத்தி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணையவழியில் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்.

மாணவர்கள் சோர்வை நீக்கவும், கரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கல்வி கற்பதற்காகவும் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் 226-வது நிகழ்ச்சியில் தென்காசி, திருநெல்வேலி மாவட்ட சாரல் ஐசிடி ஆன்லைன் வகுப்புகள் அமைப்பின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக சாரல் ஆன்லைன் கல்வி ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது.

விழாவில் ஆசிரியை மாலதி வரவேற்றார். தென்காசி தொகுதி எம்எல்ஏ எஸ்.பழனி, கல்வி ரேடியோவை தொடங்கி வைத்து பேசினார். திருநெல்வேலி மற்றும் தென்காசி சமக்ரா சிக்சா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், மதுரை கலகல வகுப்பறை ஆசிரியர் சிவா, சாயல்குடி ஆசிரியர் பெர்ஜின், தென்காசி தளவாய் மாடசாமி, மதுரை சமக்ரா சிக்சா மேற்பார்வையாளர் கணேஷ்வரி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சியில் இணையம் வாயிலாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோ வழியில் பாடம் நடத்துவதால் 4 ஜி இணையதள வசதி உள்ளவர்களே பயன் பெற முடிகிறது. 2 ஜி வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்களும் ஆடியோ வடிவில் பாடங்களை எளிதாகப் பெற இந்த இணையவழி கல்வி ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பாடங்களை குரல் வடிவில் தயாரிக்க பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் இணைந்து குழுவாக செயல்படுகிறார்கள் என்று மாலதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x