

கரோனா ஊரடங்கு சமயத்தில் பாடப்புத்தகத்தில் உள்ள அறிவியல் பாடங்களைச் செய்முறையாக்கி வரும் 7-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவரை அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் இன்று (ஜூலை13) பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சி ஜீவாநகரைச் சேர்ந்த வைரவன், பிரியங்கா தம்பதியரின் மகன் ரித்தீஸ் (12). கீழாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து வரும் இவர், மண்களைக் கொண்டு கழிவு நீரைக் குடிநீராக்குதல், காற்றாடி இறக்கை மூலம் காற்றாலை மின்சாரம் தயாரித்தல், வாழை மரம் மற்றும் உருளைக் கிழங்கில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற அறிவியல் பாடக் கண்டுபிடிப்புகளை பழைய பொருட்களைக் கொண்டு செய்முறையாக்கி வருகிறார்.
மேலும், செல்போனுக்கு நெட்வொர்க் கவரேஜை அதிகப்படுத்துதல், சிறிய மோட்டார் மூலம் சிலந்தி ரோபோ, பம்புசெட் போன்றவற்றையும் இயக்கி வருகிறார்.
ஊரடங்கு சமயத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் பெரும்பாலான மாணவர்கள் செல்போன், டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் பொழுதைக் கழித்து வரும் சூழலில், பாடம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்முறையாக்கி வரும் மாணவர் ரித்தீஸை, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம் பள்ளிக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
அப்போது, திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் சீ.புவனேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.