Published : 13 Jul 2021 03:12 am

Updated : 13 Jul 2021 05:57 am

 

Published : 13 Jul 2021 03:12 AM
Last Updated : 13 Jul 2021 05:57 AM

‘இந்து தமிழ் திசை’ - அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’: அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் படிப்புகள்- ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

robotics-and-automation

சென்னை

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள படிப்புகளாக ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் படிப்புகள் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்குஉயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வவித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 16 நாட்கள் நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிறு நடைபெற்ற 2-ம் நாள் நிகழ்ச்சியில் ‘ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் படிப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:


அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியர் டாக்டர் கே.எல்.வாசுதேவ்: நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை நாம் பணியாற்றும் இடத்தில் செலவளிக்கவுள்ளோம். ஆகவே, நாம் பணி செய்வதற்கான துறையை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய துறைகளில் ஒன்றாக ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் திகழ்கிறது.

நாம் தானியங்கி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போக்குவரத்து, உற்பத்தி என பல துறைகளில் தானியங்கிமயமாக்கலின் தாக்கத்தை உணரலாம். 2030-ம் ஆண்டில், தானியங்கிமயமாக்கல், ரோபோ பயன்பாடு மேலும் அதிகரிக்கும். அமெரிக்கா, ஜப்பான் ,சிங்கப்பூர், கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தானியங்கிமயமாக்கல் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் தானியங்கிமயத்தை உணரலாம்.

இத்துறையில் மெக்கானிக்கல் பொறியாளரின் பணி முக்கியமானது. ரோபோ வடிவமைப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் அவரது பங்குஇருக்கிறது. ரோபோடிக்ஸ் துறையில் செயல்படுவதற்கு ஏற்ற துறை சார்ந்த அறிவு தேவை. நிலையான மற்றும் அசையும் ரோபோக்கள் எனரோபோக்களை 2 விதமாகப் பிரிக்க லாம்.

ரோபோக்கள், சென்சார்கள், அக்வேட்டர்கள், மின்சாரம், இடைமுகம் ஆகியவற்றைப் பெற்றுள்ளன. சென்சார்கள் என்பது பார்ப்பது உள்ளிட்டதிறனை அளிக்கின்றன. மின்சக்திஉணவு போன்றது. இடைமுகத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடு உள்ளது. ரோபோக்களை வடிவமைக்கும் போது அவை கையாளும் பொருட்களைச் சேதமாக்காமல் இருப்பது முக்கியம். தொழிற்சாலை, போக்குவரத்து, விவசாயம், விண்வெளி ஆய்வு உள்ளிட்ட துறைகளில் ரோபோ பயன்படுகிறது. உயிரி ரோபோக்களும் உள்ளன. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோக்கள் தாக்கம் செலுத்தும். அவற்றுக்கான அறம் சார்ந்த விஷயங்களும் முக்கியமாகும்.

தி என்ட்ரன்ஸ் கேட் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆர்.அஸ்வின்: ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் படிப்புகள் என்பது மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் இன்ஜினீயர், ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ் ஆகிய துறைகளையும் உள்ளடக்கியதாகும். இன்றைக்கு ஆட்டோமேஷனின் பயன்பாடு இல்லாத துறைகளே இல்லை எனலாம்.

கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் ரோபோக்கள் ஒரு காரை முழுவதுமாக அசெம்பிள் செய்கின்றன. அதேபோல், விவசாயத் துறையில் நெல்லை அறுவடை செய்து, அரிசியாக மாற்றித் தரும் நவீன கண்டு பிடிப்புகளும் வந்துவிட்டன.

வரும்காலங்களில் நாம் சோர்ந்து உட்கார்ந்திருந்தால் ஒரு டொமஸ்டிக் ரோபோ வந்து, உங்களுக்கு தலை வலிக்கிறதா? என்று கேட்டுவிட்டு, நமக்கு மாத்திரையும், தண்ணீரும் எடுத்துத் தரும். கூடவே தலையையும் தடவிவிடக்கூடிய தொழில்நுட்பம் வரப் போகிறது.

செக்யூரிட்டி துறையில் ரோபோக்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வீடுகளைச் சுத்தம் செய்தல், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளில் ரோபோக்களின் தேவை அதிகரிக்கும். வரும் காலங்களில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இந்தத் துறை அமையவுள்ளது.

எஸ்பி ரோபோடிக்ஸ் ஒர்க்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்நேக ப்ரியா: எந்தஒரு துறையிலும் நாம் வெற்றிபெறநமக்கான திறனை அதிகரித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் துறைகளில் சுயசிந்தனையுடன் செயல்படும் திறன் கூடுதலாகஇருக்க வேண்டும். வரும் காலங்களில் ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் துறையின் பயன் இல்லாத துறைகளே இல்லை எனும் நிலை வரும். ஆட்டோமேஷன் தொழில்நுட்பத் துறையில் டிரைவர் இல்லாமலேயே ஆட்டோமேடிக்காக கார்களை இயக்கும் வசதியும் உண்டு. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை தானாகவே சரிசெய்யும் திறனையும் இனி வரும்ரோபோக்கள் செய்து கொள்ளும் நிலை வரும். ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன் துறையில் புதுமையான சிந்தனைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தொடர்ந்து, பொறியியல் படிப்பு, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றியகேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந் நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்தநிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/2T2jzxa என்ற லிங்க்கில் முழு நிகழ்வையும் காணலாம்.


‘இந்து தமிழ் திசை’அம்ரிதா விஷ்வ வித்யாபீடம்உயர்வுக்கு உயர்கல்விஅதிக வேலைவாய்ப்புரோபோடிக்ஸ் ஆட்டோமேஷன்ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சிதுறை வல்லுநர்கள்Robotics and automation

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x