Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் படித்தால் சிறந்த எதிர்காலம்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 17 நாட்கள் நடக்க உள்ளது.தொடக்க நிகழ்ச்சியில் செயற்கைநுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் படிப்புகள் குறித்து இத்துறை சார்ந்த வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

என்டிஆர்எஃப் இயக்குநர், ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) என்பது, சிந்தித்து செயல்படும் மனிதனின் திறனை ஒரு இயந்திரத்துக்குள் புகுத்தும் முயற்சி. அதேபோல, தரவுகளை (டேட்டா)வெறும் எண்களாக மட்டும் பார்க்காமல், அவற்றை பகுத்தறிந்து, தேவைக்கேற்ப பயன்படுத்துவதே டேட்டா சயின்ஸின் பணி. இந்தஇரண்டும் சேர்ந்த தொழில்நுட்பம் இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. விவசாயம், மருத்துவம், போர்க் கப்பல், அணு உலைகளில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மிகுந்த பயனளிப்பதாக உள்ளது. விவசாயத்தில் பூச்சிமருந்து, உரம், தண்ணீர் தெளிப்பது ஆகியவற்றோடு, எந்த இடத்துக்கு கூடுதல் பூச்சிமருந்து தெளிக்க வேண்டும், எந்த இடத்துக்கு தண்ணீர் அதிகம் தெளிக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்து, அதுவே செயல்படும் திறனையும் இன்றைய தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் இந்ததொழில்நுட்பம் பல வகைகளிலும் பேருதவி புரிகிறது. ‘ஸ்பாட் ஹெல்மெட்’ எனும் கருவியை அணிந்துபணியாற்றும் போக்குவரத்து காவலர்கள், 5 மீட்டர் தூரத்தில் வரும் ஒருவரது உடல் வெப்பநிலையை அறிந்து, அதற்கேற்ப அவருக்கு மருந்து, சிகிச்சை அளிப்பது குறித்து திட்டமிட உதவுகிறது. கரோனா சிகிச்சையில் டிஆர்டிஓதயாரிப்புகள் பெரிதும் பயன்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஆக்சிஜன் அளவைசோதித்து, அதற்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ ஆக்சிஜன் அளிக்கும் தானியங்கி கருவிகள் உதவியாக இருந்தன.

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. மனிதன் செய்யத் தயங்கும் ஆபத்தான செயல்களைக்கூட ரோபோக்களை வைத்து எளிதில் செய்யமுடிகிறது. கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், அணு உலை பராமரிப்பு ஆகிய பணிகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எதிர்கால உலகம் தரவுகளால் நிரம்பி வழியப் போகிறது. இவற்றை வெறும் புள்ளிவிவரங்களாக மட்டுமின்றி, சிந்தித்து தொகுத்து ஆக்கப்பூர்வமான வருங்கால வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தற்போதைய சூழலில், செயற்கைநுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் படிப்புகளை ஆர்வத்தோடு படித்து, கூடுதலாக சிந்தித்து செயலாக்கத்தோடு பணிபுரிபவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

குவி கீக் நிறுவனத்தின் இணை நிறுவனர், தலைமை செயல் அதிகாரி எஸ்.பி.பாலமுருகன்: பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது எனும் கேள்வியோடு இருக்கும் மாணவர்கள், தயங்காமல் செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் தொடர்பான படிப்புகளை படிக்கலாம். இத்துறைகளில் இன்றுமட்டுமல்ல, என்றைக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. கரோனா தாக்குதல் போன்ற நெருக்கடியான சூழலில், தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவையும், பயனும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, தற்போது இருப்பதைவிட இன்னும் அதிக வேலைவாய்ப்பு உருவாகும்.

கம்ப்யூட்டரில் ஆப்பிள் எனும் பொருளை பார்த்ததும் அதன் நிறம்,வடிவம், தன்மையை உடனே சொல்லிவிடும் ஆற்றலுடன் கூடியஇயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் நாம் வேலைசெய்யும்போது, பல்வேறு பொருட்களை வாங்குமாறு நடுநடுவே பரிந்துரை விளம்பரங்கள் வரும். இதுகூட நமது தகவல்களின் மூலமாக கண்டறிந்து, தானியங்கியாக வழங்கும்ஏற்பாடுதான். தகவல் தொழில்நுட்பத் துறை பணியில் சேர விரும்புவோர் தொடக்கத்தில் இருந்தே ஒரு விஷயத்தை புதிய கோணத்தில் சிந்திப்பதோடு, புரொக்ராமேட்டிவ் ஆக யோசிக்க வேண்டும். அப்படியான ஆற்றல், சிந்தனை நிரம்பியவர்களுக்கு இத்துறைகள் நல்லவேலைவாய்ப்பை வழங்குகிறது.

அம்ரிதா விஷ்வ வித்யாபீடத்தின் (பி.டெக்., சேர்க்கை) தலைவர் மகேஸ்வர சைதன்யா: பொறியியலில் நீங்கள் எந்த படிப்பை படித்தாலும் அதில் செயற்கை நுண்ணறிவும் இணைந்தே இருக்கிறது. இயற்பியல், கணிதம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவின் கூறுகளை பார்க்கலாம். பிளஸ் 2 முடித்தவர்களில் பலரும் இயற்பியல், கணிதத்தில் உள்ள அறிவியலை வாழ்வியலுடன் இணைத்துப் பார்க்க தவறுகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, செயற்கை நுண்ணறிவு,டேட்டா சயின்ஸ் மூலமாக வாழ்வியலோடு இணைந்ததுதான் அறிவியல் என்பதை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. எந்தகுரூப் படித்த மாணவராக இருந்தாலும், இந்த கோர்ஸ் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ‘வாழ்க்கைக்கான கல்வி, வாழ்வதற்கான கல்வி’ என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. மாணவர்கள் தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தை சமுதாய நலத்துக்காக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், பொறியியல் படிப்பு,எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். இந்தஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

முழு நிகழ்வையும் இணையத்தில் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/3i1pyLn என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x