

இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் அங்கே உயர் கல்வி படிக்க மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக மையம்- கேரளாவாக இருந்த நிறுவனம் (IIITM-K) தற்போது கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகமாக (DUK) மாற்றப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் தற்போது முதல் கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக மே 3-ம் தேதி ஆராய்ச்சிப் படிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரோனா காலத்திலும் அங்கே உயர் கல்வி படிக்க மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 30 இடங்களுக்கு, சுமார் 500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கமான ஆராய்ச்சிப் படிப்புடன் வேலை பார்த்துக்கொண்டே ஆராய்ச்சிப் படிப்பை (Industry Regular PhD) மேற்கொள்ளும் வாய்ப்பும் இங்கு வழங்கப்படுகிறது. இது, பணியாற்றிக்கொண்டே படிக்க விரும்புவோருக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆராய்ச்சி மேற்கொள்வோர் நிகழ்காலப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், வழிகாட்டியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
ஆராய்ச்சிப் படிப்புகளில் வழக்கமான தெரிவுகளை விடுத்து, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கணக்கீட்டு நுண்ணறிவு, இமேஜிங் உள்ளிட்ட பிரபல படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சாஜி கோபிநாத் கூறும்போது, ''தரமான ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்போதுமே தேவை அதிகம் இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. அறிவு சார்ந்த சமூகத்தை நோக்கி கேரளா முன்னேறி வருகிறது.
பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் தொடங்கும். ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்க உள்ளன. ஆராய்ச்சிப் படிப்புகள் தவிர்த்து எம்எஸ்சி மற்றும் எம்டெக் படிப்புகளும் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளன'' என்று தெரிவித்தார்.