Published : 06 Jul 2021 03:13 am

Updated : 06 Jul 2021 07:07 am

 

Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 07:07 AM

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 18-ம் தேதிக்குள் ஆய்வறிக்கை தாக்கல்: நீதிபதி டி.முருகேசன் ஆணையம் தகவல்

justice-murugesan-commission

சென்னை

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி டி.முருகேசன் ஆணையம் ஜூலை 18-ம் தேதிக்குள் தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில் தமிழக அரசு ஓர் ஆணையத்தை அமைத்தது.


அந்த ஆணையத்தின் 3-வது கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை, வேளாண்மை, சட்டத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. நுழைவுத் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுவரை கடினமானதாக இருந்து வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களால் தொழிற்படிப்புகளில் சேர முடியாமல் போவதற்கு பல காரணிகள் உள்ளன. அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என்பது குறித்து ஆலோசனை செய்து ஜூலை 18-ம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதி முருகேசன் கூறினார்.


தொழிற்கல்வி படிப்புஅரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைநீதிபதி டி.முருகேசன் ஆணையம்Justice murugesan commission

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x