

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு இறுதியாண்டு முடிவுகளை அறிவிக்காததால் பயிற்சியைத் தொடங்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி (பிம்ஸ்), மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு 2016-ம் ஆண்டு கல்வி பயிலத் தொடங்கிய இறுதி ஆண்டு மாணவர்கள் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வினை நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்தனர். தேர்வு முடிந்து இரண்டரை மாதங்களுக்கு மேல் ஆகியும் பல்கலைக்கழகம் மாணவர்களின் தேர்வு முடிவினை அறிவிக்காமல் காலதாமதம் செய்கிறது.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல முறை பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்ட போதும் கடந்த ஒரு மாத காலமாக உரிய பதில் அளிக்கவில்லை. தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைப்படி இறுதி ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு முடிவினை அறிவித்து ஜூன் 30-ம் தேதிக்குள் பயிற்று (internship) மருத்துவத்தைத் தொடங்கி இருக்க வேண்டும்.
மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி இந்திய அளவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், இறுதி ஆண்டுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு பயிற்று மருத்துவத்தைத் தொடங்கிவிட்டன. புதுவை பல்கலைக்கழகத்திற்குப் பிறகு தேர்வுகளை நடத்திய தமிழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் தேர்வு முடிவினை வெளியிட்டு பயிற்சி மருத்துவத்தைத் தொடங்கியுள்ளன.
புதுவையில் உள்ள ஜிப்மர், மகாத்மா காந்தி, அறுபடை வீடு போன்ற நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழக மாணவர்களும் பயிற்று மருத்துவத்தைத் தொடங்கிவிட்டனர். இதனால் புதுவை பல்கலைக்கழகத்திற்குக் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறும்போது, "ஏற்கெனவே இரண்டரை மாதங்கள் முடிந்த நிலையில் இன்றளவும் மாணவர்களுக்கு உரிய பதில் தராமலும் தேர்வு முடிவினை அறிவிக்காமலும் மீண்டும் காலம் தாழ்த்துவது மாணவர்களை பாதிப்படையச் செய்துள்ளது.
இப்போது பயிற்று மருத்துவத்தை ஆரம்பித்தால்தான் மாணவர்கள் 12 மாதம் பயிற்சி முடித்து அடுத்த ஆண்டு ஜூலையில் நடக்கும் முதுகலைத் தேர்வு எழுதத் தகுதி பெறுவார்கள். இல்லாவிடில் புதுவை சென்டாக் மாணவர்கள் மட்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் முதுகலைத் தேர்வில் பங்குபெற முடியாமல் போய்விடும்.
கரோனா காரணமாக ஏற்கெனவே 7 மாதங்கள் தாமதமான நிலையில் பல்கலைக்கழகத்தின் பொறுப்பின்மையால் புதுவை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. பெருந்தொற்றின்போது புதுவை அரசின் உத்தரவை ஏற்றுப் பணியாற்றிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களின் இன்னல்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் புதுவை அரசும், ஆளுநரும் தலையிட்டுப் புதுவை மாணவர்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தேர்வு முடிவை விரைவில் அறிவிக்கப் பல்கலைக்கழகத்திற்குத் தகுந்த அறிவுறுத்தலைத் தர வேண்டும்" என்று தெரிவித்தனர்.
கரோனாவால் தாமதம்
இது தொடர்பாகப் பல்கலைக்கழகத் தரப்பில் விசாரித்தபோது, "கரோனாவால் தேர்வுத் தாள் திருத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் முடிவுகள் வெளியாகும்" என்று தெரிவித்தனர்.