

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாக கல்விப் பணியில் ஈடுபட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான மத்திய அரசின் ஐசிடி விருதினை சேலம் மாவட்டதைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் 2018, 2019-ம் ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறப்பாக கல்விப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, ஐசிடி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதில், 2019-ம் ஆண்டில், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 ஆசிரியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூவரில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இளவரசன் தனது பணி குறித்து கூறுகையில், "கல்விப் பணியில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததற்காக, மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்துள்ளது.
எங்களது பள்ளியின் 6,7, 8-வது வகுப்பு மாணவர்களை, வீடியோ கால் வசதி (ஸ்கைப்) மூலம் 22 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் பேச வைத்து, அவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கான பயிற்சியை வழங்கினேன். நமது மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் மாணவர்கள் பேசியுள்ளனர்.
கணித பாடங்களை வகுப்பெடுத்து, அதனை க்யூ.ஆர்- கோட் மூலம் பதிவேற்றம் செய்து வைப்பேன். நான் விடுமுறையில் இருந்தால் கூட, மாணவர்கள், அந்த க்யூ.ஆர்-கோடினை, செல்போனில் ஸ்கேன் செய்து , கணிதப் பாடங்களை கேட்டு புரிந்து கொள்வார்கள். அதற்காக, பள்ளியில் 4 செல்போன்களை வைத்திருப்பேன்.
வெளிநாடுகளில் உள்ள இடங்களுக்கு, மாணவர்களை கூகுளின் விர்ச்சுவல் டூர் என்ற தொழில்நுட்பத்தில், லண்டனில் உள்ள மியூசியம் போன்ற இடங்களுக்கு நேரடியாக செல்வது போல, அந்த இடங்களைப் பார்வையிட செய்துள்ளேன்.
கூகுளின் கல்வி போதித்தலுக்கான தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தியதற்காக, உலக அளவில் 300 ஆசிரியர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு, கல்வி மீது ஆர்வத்தை அதிகரிக்கக் செய்தது" என்றார்.
சேலம் பனமரத்துப்பட்டியை அடுத்த பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எம்.தங்கராஜா தனது பணி குறித்து கூறுகையில், "யூ-டியூப் தொழில்நுட்பம் பரவலான காலத்தில், மின்சார வசதி இல்லாத பள்ளியில், மாணவர்களுக்காக, எனது கணினியில் ஃபிளாஷ் சிடி மூலமாக ஆடியோ வடிவில் பாடங்களை பயிற்றுவித்தேன். 2017-ம் ஆண்டு எஸ்எஸ்ஏ மூலம் க்யூ.ஆர்- கோட் பயிற்சி பெற்று. க்யூ.ஆர்- தொழில்நுட்ப பயிற்சி பெற்று, க்யூ.ஆர் கோட் அசஸ்மெண்ட் பணிகளில் ஈடுபட்டேன்.
பாடங்கள் தொடர்பான 150-க்கும் வீடியோக்கள் தயாரித்தேன். அவை மத்திய அரசின் கல்வி இணையதளமான தீக்ஷா-வில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வெபினார் மூலம் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வி வீடியோ உருவாக்கம் குறித்து பயிற்சி வழங்கி, அவர்களது வீடியோக்களும் தீக்ஷா-வில் பதிவேற்றப்பட்டுள்ளன.
எங்கள் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் கூட, மெயில் ஐடி வைத்திருப்பார்கள். பார்வையிழந்தவர்களுக்காக, இணையதளத்தில் ஆடியோ வடிவிலான பாடங்கள் உருவாக்கி இருக்கிறேன்" என்றார்.