Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

கரூர், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப விருது

கரூர்/ திருவாரூர்

தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு, சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஐசிடி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்திலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சு.மனோகர்(44), திருவாரூர் மாவட்டம் கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.கணேஷ் ஆகியோர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருது குறித்து வெள்ளியணை பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.மனோகர் கூறியது:

மாணவர்களைப் பற்றிய தகவல்கள், வீட்டுப் பாடங்களை அறிந்துகொள்ள க்யூஆர் கோடு முறை அறிமுகம் செய்தது, சிறிய எளிய செல்போன் செயலிகளை உருவாக்கி, அனிமேஷன் வீடியோக்கள் வழியாக மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கும் வகையில் கணினி மூலம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டது போன்றவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்றார். அவருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கிளரியம் பள்ளி கணித ஆசிரியரான கொரடாச்சேரி ஒன்றியம் பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கணேஷ் கூறியது:

கணினி சார் வளங்களான வீடியோக்கள், விளையாட்டுகள், செல்போன் செயலிகள் வாயிலாக கணிதம் கற்பித்தல், க்யூஆர் கோடு ஸ்கேனர் மூலம் சில நிமிடங்களில் மதிப்பெண்களை மதிப்பீடு செய்தல், ‘கற்கண்டு கணிதம்' என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி, 3,000 கணித ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கணிதம் கற்பித்தல், புதிய பாடநூலில் இடம்பெற்றுள்ள க்யூஆர் கோடு- கணினி சார் வளங்களை தயாரித்து வழங்கி பங்களிப்பு செய்தல், கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வகுப்பு எடுத்தல் மற்றும் கணினி சார் வளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் உள்ளிட்டவற்றை மதிப்பீடாகக் கொண்டு இந்த விருது கிடைத்துள்ளது. இதை எனது மாணவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x