Published : 29 Jun 2021 06:12 AM
Last Updated : 29 Jun 2021 06:12 AM

டஜன் மாம்பழங்களை 1.2 லட்சத்துக்கு விற்ற சிறுமி: ஆன்லைன் வகுப்புக்கு புதிய ஸ்மார்ட் போன் வாங்கினார்

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரை சேர்ந்தவர் 11 வயதான சிறுமி துளசி குமாரி. அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவர் தனது குடும்பத்துக்கு உதவியாக சாலையோரம் மாம்பழங்கள் விற்று வந்தார். இவர் உள்ளூர் சேனல் ஒன்றில், “ஆன்லைனில் படிப்பை தொடர் வதற்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். இதற்கு பணம் சேமிக்கவே மாம்பழங்கள் விற் கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆன்லைன் வகுப்பில் பயில் வதற்கு துளசி படும் போராட்டத்தை அறிந்த மும்பையை சேர்ந்த அமேயா ஹெட்டே என்ற தொழிலதிபர், துளசியிடமிருந்து 12 மாம்பழங்களை தலா ரூ.10 ஆயிரம் விலையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வாங்கிக் கொண்டார். இதற்கான தொகையை துளசியின் தந்தை ஸ்ரீமல் குமாரின் வங்கிக் கணக்குக்கு அவர் கடந்த வாரம் அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் ஒராண்டுக்கான இன்டெர்நெட் இணைப்புடன் ரூ.13 ஆயிரத்துக்கு துளசி புதிய ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார்.

கண்ணியமான சிறுமி

இது தொடர்பாக அமேயா ஹெட்டே கூறும்போது, “துளசி மிகுந்த அறிவாளி மற்றும் கடின உழைப்பாளி. மாம்பழங்கள் விற்பதை தனது தலையெழுத்து என அவர் பழிபோடவில்லை. யாரிடமும் கையேந்தவும் இல்லை. பணப் பிரச்சினையை எதிர்கொள்வதில் அவருடையை மன உறுதியை கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். இதனால்தான் ரூ.1.20 லட்சத்துக்கு மாம்பழங்கள் வாங்கிக் கொண்டேன். துள சியை ஊக்குவிப்பதற்காக மட்டுமல்ல, வேலையில் அவருடையகண்ணியத்தை அங்கீகரிப்பதற் காகவும் இதைச் செய்தேன். மேலும் வாழ்க்கையில் போராட்டத்தை ஒருபோதும் கைவிடக் கூடாது என மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக இவ்வாறு செய்தேன்” என்றார்.

இதனிடையே, துளசி தன்னிடம்தற்போது ஸ்மார்ட் போன் இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதிக அக்கறை யுடன் படிப்பேன் என்றார். அவரைப் பற்றி அவரது பெற்றோரும் பெருமிதம் தெரிவித்தனர்.

அவரை நிறைய படிக்க வைக்க விரும்புவதாக அவரது தந்தை தெரிவித்தார். துளசி மாம்பழம் விற்பதை அவரது தாய் விரும்பவில்லை. என்றாலும் இந்த உதவி அவரது படிப்புக்கு தடையாக இருக்காது என நம்புவதால் இதை அனுமதிப்பதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x