Published : 28 Jun 2021 07:28 PM
Last Updated : 28 Jun 2021 07:28 PM

நீட் தாக்கம் குறித்த அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்?- ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பதில்

நீட் தாக்கம் குறித்த அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு, தாக்கத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 10-ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் கடந்த 14-ம் தேதி அன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு பாதிப்பு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை ஜூன் 23-ம் தேதி வரை தெரிவித்தனர்.

இதற்கிடையே இன்று (28-ம் தேதி) குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இன்று அவர் அளித்த பேட்டி:

''நீட் தேர்வு வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் எல்லா வகையான கருத்துகளும் அதில் உள்ளன. ஒவ்வொரு கருத்தையும் ஆய்வுசெய்த பிறகு எது நல்லது என்று பார்த்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வின் தாக்கம் குறித்து மொத்தமாக 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர், எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை வெளியில் தெரிவிக்க முடியாது. மின்னஞ்சல், அஞ்சல் ஆகியவற்றின் மூலம் மக்கள், தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். நிறையப் பேர் தேர்வு வேண்டும் வேண்டாம் என்று மட்டும் கூறியுள்ளனர்.

சிலர் ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வை வைக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அது அவர்களின் சொந்தக் கருத்து. அதைத் தவறு எனக் கூற முடியாது. எல்லாக் கருத்துகளையும் ஆராய்ந்து முடித்தபிறகு அறிக்கை எழுதப்பட்டு, தாக்கல் செய்யப்படும். அது உடனடியாக இன்றே நடந்துவிடாது.

ஒரு மாத காலத்துக்குள் அறிக்கையைக் தாக்கல் செய்ய முயல்கிறோம். முடியாவிட்டால் சிறிது காலம் கூடுதலாகத் தேவைப்படலாம். எவ்வளவு நாட்கள் ஆகும் என்று இப்போதே கூறமுடியாது.

எங்கள் குழுவை அமைத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நான் கருத்து கூறக்கூடாது. நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்.

மீண்டும் ஆலோசனை

மீண்டும் ஜூலை 5ஆம் தேதி மக்கள் தெரிவித்த கருத்துகள் மீதான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் இன்று பங்கேற்றதைப் போல குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பெறுவர்''.

இவ்வாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x