அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பையில் ஜெ., ஈபிஎஸ் படங்கள்

விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட புத்தகப் பையுடன் மாணவர்கள்.
விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட புத்தகப் பையுடன் மாணவர்கள்.
Updated on
1 min read

விருத்தாச்சலம் அரசுப் பள்ளி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்று புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அப்போது புத்தகங்களுடன் பையும் சேர்த்து வழங்கப்பட்டது. புத்தகங்களை வாங்கிய மாணவர்கள் அவற்றைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அப்போது அந்தப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து மாணவர்களிடம் பேசியபோது, தாங்கள் 9-ம் வகுப்புப் படிப்பதாகவும், இன்று காலைதான் புத்தகம் மற்றும் பை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம், கேட்டபோது, பள்ளிகளில் புத்தகங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டிருக்கிறோம். பையோ அல்லது இதர உபகரணங்களோ வழங்கக் கூடாது என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் பை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து, வழங்கப்பட்டிருந்தால் உடனடியாக அவை திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in