திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூல்
திண்டிவனத்தில் இயங்கும் நகர கல்வி மேம்பாட்டுக் குழு என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணி தலைமை யில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்ட முடிவில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “திண்டிவனத்தில் இயங்கும் அரசு நிதி உதவி பெறும் புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் சட்டவிரோதமான ரூ.5,350 முதல் ரூ.7,750 வரை வசூல் செய்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி பிற்பகல் சேர்க்கையை தொடங்கி 17-ம் தேதி பிற்பகலோடு சேர்க்கையை முடித்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுகளிலும் இதே போல சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து வசூல் செய்த பணத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாற்றுச்சான்றிதழ் பெறும் போதும் பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதுகுறித்து புனித பிலோமினாள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரியிடம் கேட்டபோது, “இப்பள்ளியில் ஆங்கில வழியில் நடத்தப்படும் பிளஸ் 1 வகுப்பு சுய உதவியின் கீழ் இயங்குகிறது. இதற்கு அரசின் நிதி உதவி கிடையாது. மற்ற வகுப்புகளில் ஏழை மாணவர்கள் கட்டுவதை கட்டுவார்கள்.
எங்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரத்திற்கு மின் கட்டணம் வருகிறது. மேலும் பராமரிப்பு செலவுகள் உள்ளன. இது குறித்து மாவட்ட கல்வித்துறைக்கு எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளோம். நாங்கள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதில்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு கட்டணம் வாங்குவதில்லை. அரசு தணிக்கை இல்லாமல், வேறு தணிக்கையும் நடைபெறுகிறது. அதை எப்போது வேண்டுமானாலும் காட்ட தயாராக உள்ளோம்” என்றார்.
