Last Updated : 23 Jun, 2021 04:41 PM

 

Published : 23 Jun 2021 04:41 PM
Last Updated : 23 Jun 2021 04:41 PM

இணையத்தில் இந்தியக் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய நூல்கள்: தேசிய நூலகம் அறிவிப்பு

இளம் தலைமுறை வாசகர்களைக் கவரும் வகையில், இணையத்தில் இந்தியக் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய நூல்களைப் பதிவேற்றம் செய்ய தேசிய நூலகம் திட்டமிட்டுள்ளது.

தேசிய நூலகம் கொல்கத்தாவின் அலிபூர் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயக்குநர் ஜெனரல் அஜய் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

"தேசிய நூலகத்தின் வசம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதில் சுமார் 5,000 தலைப்புகளில் இந்தியக் கலாச்சாரம் குறித்த புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வருங்காலத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பக் காலகட்டத்தில், இளம் தலைமுறை வாசகர்களைக் கவர இது அவசியம். உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் டிஜிட்டல் வடிவில், நூல்களைப் படிக்க இது உதவும். மத்திய கலாச்சாரத் துறை இதற்கு நிதியுதவி செய்ய உள்ளது.

பாரம்பரியமான நூலக சேவைகளோடு தற்காலத் தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு, இளைஞர்கள் மின்னணு சார்ந்த கருவிகளைப் பயன்படுத்த ஏதுவாக நூலகம் அமைக்கப்படும்.

பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்டர் உள்ளிட்ட நூலகங்கள், அவர்களின் மென்பொருளைக் கொண்டு பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. தேசிய நூலகத்தின் இணையப் பயன்பாடு, இந்திய விதிகளின் அடிப்படையில் நமது தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைக் கொண்டு நம்முடைய வல்லுநர்களால் தொடங்கப்படும்.

தேசிய நூலகத்தை இன்னும் அதிக வீச்சில் சமகாலத்துக்கு ஏற்றவாறு, மேம்படுத்தப்பட்ட வகையில் இயங்க வைக்கக் கூடுதலாக 8 மொழிகள் சேர்க்கப்பட உள்ளன. ஏற்கெனவே உள்ள 14 மொழிகளோடு சிந்தி, கொங்கனி, மணிப்புரி, நேபாளி, போடோ, டோக்ரி, மைதிலி, மற்றும் சாந்தாலி ஆகிய 8 அட்டவணை மொழிகளும் சேர்க்கப்பட உள்ளன."

இவ்வாறு தேசிய நூலக இயக்குநர் ஜெனரல் அஜய் பிரதாப் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x