Last Updated : 23 Jun, 2021 02:05 PM

 

Published : 23 Jun 2021 02:05 PM
Last Updated : 23 Jun 2021 02:05 PM

50 ஆண்டுகால டாக்டர் கனவு: போராடி முனைவர் ஆன குஜராத் மூதாட்டி

நிறையப் பேருக்கு வயது என்பது வெறும் எண்ணாக இருப்பதில்லை. ஆண்டுகள் கூடக்கூட முதுமையாகத் தன்னை உணர்ந்து அப்படியே ஆகியும் விடுகின்றனர். ஆனால், குஜராத்தைச் சேர்ந்த மூதாட்டி உஷா லோதயா தன்னுடைய 67 வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த உஷாவுக்கு 12 வயதிலேயே மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவருடைய 16 வயதில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. படிக்க விரும்பிக் கல்லுாரியில் பிஎஸ்சி சேர்ந்திருந்த அவருக்கு 20 வயதில் திருமணம் நடந்தது. அதனால் கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார்.

இதுகுறித்து உஷா லோதயா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''திருமணத்துக்குப் பின் குடும்பத்தை கவனித்ததால் படிக்க முடியவில்லை. பொறுப்புகள் குறைந்தபிறகு மீண்டும் கல்வியைத் தொடர விரும்பி 9 ஆண்டுகளுக்கு முன் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தேன். என்னுடைய குருவும் ஜெயின் அறிஞருமான ஜெயதர்ஷிதாஸ்ரீஜி மகராஜ் மூலம் ஈர்க்கப்பட்டு, ஆன்லைனிலேயே மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரியில் ஜெயின் மதத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். அதிலேயே முதுகலைப் பட்டமும் பெற்றேன்.

3 ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்லுாரிப் பேராசிரியரின் வழிகாட்டுதலின்படி, மகாராஷ்டிராவில் உள்ள ஷத்ருஞ்சய் அகாடமியில் முனைவர் ஆய்வுப் படிப்புக்குப் பதிவு செய்தேன். 'மதம் போதித்த சமாதானக் கொள்கைகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டேன். கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வாயிலாக வழிகாட்டுதல்களைப் பெற்றேன். இதற்கிடையே ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு என் கணவர் மரணம் அடைந்தார்.

பல்வேறு சிரமங்களுக்கு நடுவிலும் தற்போது ஆய்வை முடித்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு முன்னதாகப் படித்து மருத்துவர் ஆகி, பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டத்தைப் பெற ஆசைப்பட்டேன். தற்போது முனைவர் பட்டம் பெற்று, என் கனவை நிறைவேற்றி உள்ளேன். வருங்காலத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன்'' என்று உஷா லோதயா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x