Last Updated : 23 Jun, 2021 03:11 AM

 

Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கல்லூரி மாணவர்கள் கோரிக்கை

சேலம்

கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தினமும் 2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா தொற்று பரவல்காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று பயன்பெறும் வகையில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவசடேட்டா வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை,அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன் அடைந்தனர்.

இதற்காக மாணவர்களுக்கு எல்காட் நிறுவனம் மூலம் 3 மாதம் செல்லத்தக்க விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் பயன் தற்போதுமுடிவடைந்துள்ளது. அதேநேரத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறத்திலும், ஏழ்மை நிலையிலும் உள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட 2 ஜிபி இலவச டேட்டா, கடந்த 18-ம் தேதியுடன்முடிந்துவிட்டது. தேர்வு நேரத்தில்கல்லூரியில் இருந்து வினாத்தாள்அனுப்புகின்றனர். விடைத்தாள்களை ஸ்கேன் கேம் மூலமாக பிடிஎஃப் ஃபைலாக மாற்றி கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், மாதிரி தேர்வுகளுக்கும், செமஸ்டர், அரியர் தேர்வுகளுக்கும் ஆன்லைனில்தான் படிக்கிறோம். தேர்வையும் ஆன்லைனில்தான் எழுதி வருகிறோம். எனவே, அரசு மீண்டும் இலவச டேட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கூறியதாவது:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற 113 கல்லூரிகளில் 1.75 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த ஜூன் 15-ம் தேதி முதல் செமஸ்டர், அரியர் தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வு ஜூலை 15-ம் தேதிக்குள் முடிவடையும்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி இலவச டேட்டா முடிவுற்றது தொடர்பாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உயர் கல்வித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x