Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM

கல்லூரி முதல் ஆண்டிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்; ‘ஆளப் பிறந்தோம்’ - வழிகாட்டு நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் அறிவுரை

சென்னை

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகிவிட வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கோ.முனிராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப்பிறந்தோம்’ எனும் இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் ஐபிஎஸ் அதிகாரி, சிவில்சர்வீஸ் தேர்வுப் பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும் அதற்குத் தயாராகும் முறை பற்றியும் மாணவ, மாணவிகள் இடையே உரையாற்றினர். அவர்களின் உரை விவரம் வருமாறு:

உ.பி. மாநிலம் ஆக்ரா மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கோ.முனிராஜ், ஐபிஎஸ்: ‘கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே லட்சிய கனவு’ என்று அடிக்கடி குறிப்பிடுவார் அப்துல் கலாம். எப்போதுமே பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்று கனவு காண வேண்டும். 10-ம் வகுப்பு படிக்கும்போது மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதற்கான வழிமுறை தெரியவில்லை.

பிளஸ் 2 முடித்து, கோவை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி விவசாயமும், ஹரியாணாவில் எம்எஸ்சி விவசாயமும் படித்தேன். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொருத்தவரை எனது முதல் முயற்சியில் முதல்நிலைத் தேர்வில்கூட வெற்றிபெற இயலவில்லை. பிறகு மெயின் தேர்வு வரை சென்றேன். எனது 4-வது முயற்சியில்தான் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானேன்.

10-ம் வகுப்பு படிக்கும்போதே சிவில்சர்வீஸ் தேர்வுக்கு அடித்தளம் அமைத்துகல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும்போதே தேர்வுக்கு தயாராகி விட்டால்முதல் முயற்சியிலேயே வெற்றிபெறலாம். சரியான வழிமுறை இருந்தால் 23 அல்லது24 வயதிலேயே ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகிவிடலாம். அதற்கு முறையாகத் திட்டமிட்டுபடிக்க வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சி - இவைதான் வெற்றிக்கு அடிப்படை. விருப்பப் பாடத்தைக் கவனத்தோடு தேர்வுசெய்ய வேண்டும்.

முதல்நிலைத் தேர்வை முடித்துவிட்டு அதன் முடிவுக்காக காத்திராமல், அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கிவிட வேண்டும். மெயின் தேர்வில் விடையின் உள்ளடக்கமும், அதை எழுதும் முறையும் மிகவும் முக்கியம். நமது விடைத்தாள் தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும். படங்கள், சார்ட் இடம்பெற வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வு என்பது நீண்ட பயணம். எனவே, தோல்விகளைக் கண்டு மனம் தளரக்கூடாது.

தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினரும், மண் உயிரியலாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்: மாணவர்கள் நல்ல முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும். படித்த பாடங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது அப்பாடங்களை ஆழமாக கற்றுக்கொள்ளமுடியும் என்பதுதான் உண்மை. மாணவர்கள் எவ்விதமான அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் தங்கள் விருப்பப்படி படிக்க வேண்டும். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கக் கூடாது. அவ்வாறு படித்தால் பெயரளவில் படிப்போமே தவிர பாடம் மூளைக்குச் செல்லாது. குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு படிக்கும்போது மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

ஒரு விஷயத்தை வேறு கோணத்தில் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியம். பாடங்களை நினைவில் வைக்க எளியஉத்திகளைக் கையாளலாம். அண்மைக்கால நிகழ்வுகளுக்கு தினமும் நாளிதழ்களைப் படிக்க வேண்டியது அவசியம். நேர்முகத்தேர்வு செல்லும் நாளில்கூட அன்றைய தின நாளிதழ்களைப் படிக்க வேண்டும். பெருமுயற்சி மேற்கொண்டு படித்தால் நிச்சயம் வளர்ச்சி உண்டு.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்சியாளர் சந்துரு: 2004-ம் ஆண்டில் வெறும் 36மாணவர்களுடன் சென்னையில் தொடங்கப்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் தற்போது ஆயிரக்கணக்கானோர் பயிற்சிபெறுகின்றனர். 1200-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருப்-1,குருப்-2 அதிகாரிகளையும் இந்த அகாடமி உருவாக்கி இருக்கிறது.

40-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் மாணவர்கள் ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக உள்ளனர். கடந்த ஆண்டில் எங்கள் மாணவர்கள் 201 பேர் சிவில் சர்வீஸ் தேர்வில்வெற்றிபெற்றனர். சரியான முயற்சி, வழிகாட்டி இருப்பின் முதல் முயற்சியிலேயே இத்தேர்வில் வெற்றிபெறலாம்.

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3-வது வாரம் அல்லது 4-வது வாரத்தில் வெளியாகிறது. தோராயமாக 800 முதல் 1000 காலியிடங்கள் வருகின்றன. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். அஞ்சல்வழியில் படித்து பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது ஆகியிருக்க வேண்டும். முந்தைய படிப்பின் சாதனையை யுபிஎஸ்சிபார்ப்பதில்லை. அது நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெறும் திறமை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

அதைத்தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பாக மாணவ, மாணவிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு கருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x