Last Updated : 21 Jun, 2021 06:00 PM

 

Published : 21 Jun 2021 06:00 PM
Last Updated : 21 Jun 2021 06:00 PM

கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்தது: ஆன்லைன் வகுப்பு, தேர்வுகளுக்குத் தயாராவதில் 9 லட்சம் மாணவர்கள் சிரமம்

கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்த நிலையில், ஆன்லைன் வகுப்பு, தேர்வுகளில் பங்கேற்பதில், மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆட்சியில் 2 ஜிபி இலவச டேட்டா

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப். 1-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 2 ஜிபி இலவச டேட்டாவைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டமானது , அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்கள் பயன் அடைந்துள்ளனர். ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டன.

பொது முடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகள்

கரோனா தொற்று இரண்டாம் அலை அதிகரித்ததை அடுத்து, கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது. இந்தக் கல்வி ஆண்டில் மாணவர்கள் படிக்க, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வழிவகுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களைப் படித்து வருகின்றனர்.

இலவச டேட்டாவால் 9 லட்சம் பேர் பயன்

ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் இணைய டேட்டாக்களையே நம்பியுள்ளன. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறத்திலும், ஏழ்மை நிலையிலும் உள்ளதால், அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இணையதள வசதி இல்லை என்கிற பிரச்சினை எழுந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் 9,69,047 மாணவ, மாணவியர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டது. மாணவர்கள் அதை, ஆன்லைன் வகுப்பு, தேர்வுகளுக்குப் பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இலவச 2 ஜிபி டேட்டா திட்டம் முடிந்துவிட்ட நிலையில், மாணவர்கள் அலைபேசி வாயிலாக ஆன்லைன் வகுப்புகளிலும், தேர்வுகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலையால் சிரமம் அடைந்துள்ளனர். இதையடுத்துக் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் நலன் கருதி மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கல்லூரி மாணவ, மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பல லட்சம் மாணவர்கள் பயன்பெற வேண்டும்

இதுகுறித்துப் பெரியார் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ''பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்குக் கடந்த 18-ம் தேதியோடு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிந்துவிட்டது. தேர்வு நேரத்தில் கல்லூரியில் இருந்து வினாத்தாள் அனுப்புகின்றனர். அதைப் பதிவிறக்கம் செய்வதோடு, விடைத்தாள்களை பிடிஎஃப் கோப்பாக மாற்றிக் கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். மேலும், மாதிரித் தேர்வுகளுக்கும், செமஸ்டர், அரியர் தேர்வுகளுக்கும் ஆன்லைன் வாயிலாகவே படிக்க வேண்டியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே, தேர்வுகளையும் எழுதி வருகிறோம். இவற்றுக்கு டேட்டா அவசியமாகியுள்ளதால், அரசு மீண்டும் இலவச டேட்டா வழங்குவதன் மூலம் பல லட்சம் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள்'' என்று தெரிவித்தனர்.

இத்திட்டத்தை மீண்டும் அரசு அமல்படுத்தும்

இதுகுறித்துப் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் கூறும்போது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற 113 கல்லூரிகளில் 1.75 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் செமஸ்டர், அரியர் தேர்வுகள் கல்லூரிகளில் நடந்து வருகின்றன. இத்தேர்வு வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் முடிவுற்று, அம்மாத இறுதி வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் முடிவுற்றது சம்பந்தமாக அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகங்களும், மாணவ, மாணவியரும் உயர் கல்வித்துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். புதிய அரசு மாணவ, மாணவியரின் நலன் கருதி, இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அரசின் கொள்கை மாணவ, மாணவர்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் என்பதால், இலவச டேட்டா திட்டம் விரைவில் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x