Published : 21 Jun 2021 03:13 AM
Last Updated : 21 Jun 2021 03:13 AM

ஓட்டல் மேலாண்மை படிப்புக்கு அதிக வேலைவாய்ப்பு, சிறந்த எதிர்காலம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் அறிவுரை

சென்னை

ஓட்டல் மேலாண்மை படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதால் இத்துறையை மாணவர்கள் தயக்கமின்றி தேர்வு செய்துபடிக்கலாம் என்று ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினர்.

பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்துஎங்கு, என்ன படிப்பது, எதற்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பது தொடர்பாக பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர்க்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம்இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓட்டல் மேனேஜ்மென்ட் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்வு இணையவழியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் பேசியதாவது:

தி ரெசிடன்ஸி ஓட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத்: ஓட்டல் மேலாண்மை கல்விஎன்றாலே சமையல் மட்டும்தான் என்ற குறுகிய பார்வை, சமூகத்தில் உள்ளது. ஆனால், மருத்துவம் போன்ற சேவைத் துறைகளில் இதுவும் ஒன்று. இப்படிப்புகளில் சேரும் மாணவர்களின் ஆளுமை திறன்கள் மேம்படுத்தப்பட்டு, விருந்தோம்பல் சார்ந்த துறைகளில் வாடிக்கையாளர் சேவை உறுதி செய்யப்படுகிறது. சுற்றுலா,போக்குவரத்து, மருத்துவமனைகள் உட்பட பெரும்பாலான தொழில் துறைகள் வாடிக்கையாளரின் சேவையை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகின்றன. எனவே, ஓட்டல் மேலாண்மை படிப்பவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

கரோனா போன்ற பேரிடர் சூழல்களை கையாள்வதற்கு ஏற்ப புதிய பாடத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், தற்போது ஓட்டல் மேலாண்மை கல்வியில் சேருபவர்கள் படிப்பை முடிக்கும்போது முழுமையாக பயிற்சி பெற்று வெளியேறுவார்கள்.

கரோனா பரவலுக்கு பிறகு, 2023-ம் ஆண்டில் ஓட்டல் துறைபெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஓட்டல் மேலாண்மை படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதால் மாணவர்கள் தயக்கமின்றி இத்துறையை தேர்வு செய்து படிக்கலாம். சிறந்த மொழி ஆளுமை, பேச்சுத் திறன், உணர்வுசார் நுண்ணறிவு உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொண்டால் இத்துறைகளில் சாதனைகள் புரியமுடியும்.

ஐஎஃப்சிஐ நிறுவனரும், பொதுச்செயலாளருமான டாக்டர் செஃப்சவுந்தர்ராஜன்: உணவின் தேவை இருக்கும் வரை, இத்துறை பின்னடைவை சந்திக்காது. கடந்த500 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 14 மடங்குதான் அதிகரித்துள்ளது. ஆனால், மனிதனுக்கு தேவையான உணவின் கலோரி அளவு 115 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்திலும் உலக யுத்தங்கள், நோய் தாக்குதல்கள் உள்ளிட்ட பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், உணவின் தேவை ஒருபோதும் குறையவில்லை. கரோனா போல எந்த பேரிடர் வந்தாலும் இத்துறைக்கு பாதிப்பு இருக்காது.

ஓட்டல் மேலாண்மை படிப்புகளில் சேரும்போது, கல்லூரிகளை தேர்வு செய்வதில் அதிக கவனம்செலுத்த வேண்டும். இப்படிப்புகளில் செய்முறைவழி கல்விதான் அதிகம் உள்ளது என்பதால், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், சிறந்த பயிற்றுநர்கள் உள்ள கல்லூரிகளில் சேரவேண்டும்.

உலகம் முழுவதும் ஓட்டல் துறையில் வேலைவாய்ப்புகள் பரவியுள்ளன. பல்வேறு முக்கிய நிறுவனங்கள் நம் நாட்டிலும் முதலீடு செய்துள்ளன. எனவே, வேலை குறித்து அச்சப்பட வேண்டாம். ஆரம்ப காலத்தில் ஊதியம் சற்று குறைந்த அளவில்தான் இருக்கும். அதை பயிற்சியாக எடுத்துக்கொண்டு அனுபவம் பெற்ற பிறகு, துறையில் நல்ல வளர்ச்சியை பெறமுடியும்.

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப்ஓட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் ஆன்டனி அசோக்குமார்: மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்வு செய்ய பெற்றோர் வழிகாட்ட வேண்டும். இந்த படிப்பை முடித்த பலர் அமெரிக்கா மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் நல்ல நிலையில் உள்ளனர்.

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தைப் பொருத்தவரை, ஓட்டல் மேலாண்மை கல்வியில் சிறப்பானகட்டமைப்பு வசதிகளுடன், தரமான கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பையும் உறுதிசெய்கிறது.

உணவுத் துறை பல்வேறு புதிய அம்சங்களுடன் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது. இதன் ஜிடிபி விகிதம் வரும் ஆண்டில் 10 சதவீதமாக உயரும் என்றுகணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக வேலைவாய்ப்புகளை சுற்றுலா, உணவுத் துறைகள் வழங்குகின்றன. இத்துறைகளில் விநாடிக்கு 2 பேர் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இத்துறையை தேர்வு செய்வதன்மூலம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர், மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://youtu.be/gfIQ-8q6jRw என்ற யூ-டியூப் லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x