Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளியை பசுமையாக மாற்றிய ஆசிரியர்: மாற்றத்துக்கான விதையை ஊன்றியதாக பெருமிதம்

ராமனூத்து ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் தங்களால் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் மாணவ, மாணவிகள்.

கோவில்பட்டி

கரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ராமனூத்து அரசு பள்ளி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை மாணவர்கள் பங்களிப்புடன் நடவு செய்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுமையாக மாற்றி உள்ளார்.

ராமனூத்து கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் 18 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு மு.க.இப்ராஹிம் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஓராண்டுக்கு மேலாக பள்ளி மூடப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் மாணவர் களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை உருவாக்கும் பொருட்டு இப்ராஹிம் சில முயற்சிகளை மேற்கொண்டார். தினமும் காலையில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்துக்கு வந்து, தலா ஒரு மரக்கன்று நடவு செய்ய பயிற்சி வழங்கினார். முதலில் பெற்றோர் மாணவர்களை அனுப்ப அச்சப்பட்ட நிலையில், பாதுகாப்புடன் ஆசிரியர் மேற்கொள்ளும் சமூகப் பணியை பார்த்த பின்னர் தாமாக முன் வந்து பிள்ளைகளை மரக்கன்றுகள் நடுவதற்கு அனுப்பி வைத்தனர்.

சப்போட்டா, மாதுளை, அரை நெல்லி, பப்பாளி, எலுமிச்சை, கொய்யா, பாதாம், வாழை, மூங்கில் உள்ளிட்ட மரங்கள், துளசி, மல்லிகை, செம்பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட செடிகள் மற்றும் மூலிகைகள் மாணவர்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதனால் தற்போது இப்பள்ளி வளாகம் முழுவதும் பச்சை பசேல் என பலவகையான மரங்கள் வளர்ந்து கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் காணப்படுகிறது.

இதுகுறித்து மு.க.இப்ராஹிம் கூறும்போது, ‘‘நான் ஆசிரியர் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகளா கிறது. நான் வசிக்கும் விளாத்திகுளத்தில் இருந்து ராமனூத்து கிராமத்துக்கு 18 கி.மீ. தூரம் தினமும் இருசக்கர வாகனத்தில் வரும்போது, மரங்கள் இல்லாததால் உள்ள வெறுமையை அனுபவித்தேன்.

புவி வெப்பமயமாதல் பிரச்சி னையைத் தடுக்கும் பொறுப்பு ஆசிரியரான எனக்கு இருப்பதாக உணர்ந்தேன். பெயருக்காக ஆயிரம் மரங்களை நட்டு அனாதை யாக்குவதைவிட, ஒரு மரம் நட்டாலும் குழந்தையைப்போல பராமரித்து வளர்க்க வேண்டும். போதிக்கும் இடத்தில் இருக்கும் நாம், ஆரம்பத்திலேயே மாணவர் கள் மனதில் சுற்றுச்சூழல் பாது காப்பு விதையை ஊன்ற வேண்டும் என முடிவெடுத்து, பள்ளி வளாகத்தை பசுமையாக்க திட்டமிட்டேன்.

இதற்காக மாணவ, மாணவிகளை வரவழைத்து பயிற்சி அளித்தேன். ஊரடங்கு காலம் என்பதால், பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியதுடன், கண்காணித்தும் வந்தேன். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மாணவர்களின் இல்லங்களை தேடிச் சென்று உதவினேன்.

பள்ளியில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொண் டேன். இதற்கு மாணவ, மாணவிகளிடம் அதிக ஆர்வம் இருந்தது. என்னால் வர முடியாத நாட்களில் கூட, பொறுப்புணர்வுடன் காலையில் பள்ளி வளாகத்துக்கு வந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். ஒரு ஆண்டு காலத்தில் பள்ளி வளாகத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்துள்ளோம்.

பள்ளியில் மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்கள், தங்களது இல்லங்களைச் சுற்றியுள்ள காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கின்றனர். மாற்றத்துக்கான விதையை ஊன்றி உள்ளோம். ஒரு நல்ல செயலை ஆசிரியர்கள் தொடங்கி வைத்தால், மாணவர்கள் அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x