Published : 17 Jun 2021 05:20 PM
Last Updated : 17 Jun 2021 05:20 PM

பிரதமரை முதல்வர் சந்தித்து திரும்பும்போது ‘நீட்’ தேர்வு தொடர்பாக நல்ல முடிவு கிடைக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

‘‘டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்தித்துவிட்டு வந்த பிறகு ‘நீட்’ தேர்வு தொர்பாக கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும், ’’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுவாக ‘நீட்’ தேர்வு பற்றி மாணவர்களிடம் அச்சம் உள்ளது. இதுதொடர்பாக பேசுவதற்குதான் டெல்லிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றிருக்கிறார்.

அங்கு அவர் பிரதமரை சந்திக்க உள்ளார். அவரை சந்தித்துவிட்டு வந்த பிறகு ‘நீட்’ தேர்வு தொடர்பாக உறுதியாக கண்டிப்பாக நல்ல முடிவு கிடைக்கும்.

சட்டமன்றத்தில் தெளிவான முடிவை முதல்வர் அறிவிப்பார். பள்ளிகளை எந்த நேரத்திலும் திறப்பதற்கு தயாராக உள்ளோம். அதற்காக கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறேன்.

பெரும்பாலான ஆசிரியர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு தயார் நிலையில் உள்ளனர். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி ஐசிஎம்ஆர் இதுவரை எந்த வழிகாட்டுதலும் வழங்கவில்லை.

அவர்கள் கூறியபிறகு மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முடிவெடுக்கப்படும். கரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதால் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளிகளில் இருந்து அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகிறார்கள்.

அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து அவர்களைத் தொடர்ந்து தக்க வைக்கப் போதுமான ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி திறம்பட அரசு பள்ளிகளில் கல்வியை வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்காக ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு கமிட்டி அமைத்துள்ளோம். நிறைய ஆலோசனைகளை வழங்கி கொண்டிருக்கின்றனர்.

அனைத்து தரப்பினரும் திருப்தி அடையும் வகையிலும், ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எது நல்தோ அந்த முடிவு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை:

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேலும் கூறுகையில், ‘‘கடந்த முறையே கூடுதலாக கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதி மன்றமே 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்கவும், அதுவும் முதல் தவனையில் 40 சதவீதமும், இரண்டாவது தவனையில் 35 சதவீதமும் பெறுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், அதையும் மீறி தனியார் பள்ளிகள் ஓடாத பஸ்ஸுக்கும், போடாத சாப்பாட்டிற்கும் சேர்த்து கூடுதல் கட்டணம் பெறுவதாக புகார்கள் வருகின்றன. பெற்றோர் புகார் தெரிவிக்க இமெயில் ஐடி, ஹெல்ப் லைன் நம்பர் வழங்கியிருக்கிறோம்.

ஆனால், பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெற்றோர் புகார் தெரிவிக்க தயங்குகின்றனர். ஆனால், அவர்கள் பயப்பட வேண்டாம். ஏனென்றால் கல்வித்துறை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்காக மாணவர்களையும், பெற்றோரையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறாம்.

அது கூடுதல் கல்விக் கட்டணம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட எந்தப் புகாராக இருந்தாலும் கண்டிப்பாக தவறு செய்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x