Last Updated : 17 Jun, 2021 02:04 PM

 

Published : 17 Jun 2021 02:04 PM
Last Updated : 17 Jun 2021 02:04 PM

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கே.வி. பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்க கோரிக்கை

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்கு பிஜேடி எம்.பி. அமர் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அலையில் கோவிட் 19 தொற்றால் நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

குடும்பத்தில் தாய், தந்தை என இருவருமே பலியான சம்பவங்களும் நடந்தன. இதனால், அவர்களின் குழந்தைகள் ஆதரவின்றித் தவித்தனர். இதனையடுத்து முதன்முதலாக மத்தியப் பிரதேச மாநில அரசு ''கரோனா பெருந்தொற்றில் பெற்றோர்களை, பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் இலவசக் கல்வி வழங்கப்படும். அத்துடன் மாதாமாதம் ரூ.5,000 ஓய்வூதியமும் இலவச ரேஷனும் வழங்கப்படும்'' என்று தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றதை அடுத்துப் பல்வேறு மாநில அரசுகளும் கரோனாவால் பெற்றோர்களை/ பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தன. மத்திய அரசும் இலவசக் கல்வி, நிதியுதவி உள்ளிட்டவற்றை அறிவித்தது.

இந்நிலையில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கே.வி. பள்ளிகளில் இலவசக் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்கு பிஜேடி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிஜு ஜனதா தள எம்.பி.யும் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளரும் ஒடிசாவைச் சேர்ந்தவருமான அமர் பட்நாயக், மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் கூறியுள்ளதாவது:

'' கரோனா வைரஸ் 5 அல்லது 6 வயதுக் குழந்தைகளைக்கூட திடீரென ஆதரவற்றவர்களாக ஆக்கிவிட்டது. ஏராளமானோர் வீடிழந்து, பணமில்லாமல், உணவு, உடைகள் போதாமல் நிர்க்கதியாக நிற்கின்றனர். இன்னும் பல குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெற்றோரின் ஆதரவு இல்லாத, இழப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வயதுகூட இல்லை.

ஒடிசாவில் ஏற்கெனவே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மனிதாபிமான அடிப்படையில் மத்திய அரசு அத்தகைய குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இலவசக் கல்வியை அளிக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு, பள்ளி வகுப்பு, ஒதுக்கப்பட்ட இடங்கள் என எதையும் கருத்தில்கொள்ளாமல் அந்தக் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்போதுதான் புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் அத்தகைய குழந்தைகளின் பெயர்களைச் சேகரித்து பின்னர் அவர்களுக்குப் பல்வேறு பள்ளிகளை ஒதுக்குவது காலதாமதமான பணியாக மாறும்.

அதனால் தற்போது கரோனா தொற்றால் அல்லது அதற்குப் பிந்தைய சிக்கல்களால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, இறப்புச் சான்றிதழ் அடிப்படையில் உடனடியாக அருகில் உள்ள ஏதாவது ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் அளிக்க வேண்டும்''.

இவ்வாறு அமர் பட்நாயக் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x