

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளராக உமா மகேஸ்வரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பாலச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சட்டம் 1954-ன்படி தமிழக ஆளுநரின் ஒப்புதலோடு புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்த நந்தகுமாருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோலத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.